நாமக்கல்லில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்


நாமக்கல்லில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 15 March 2019 4:00 AM IST (Updated: 15 March 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி மண்டல அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சி முகாம் கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது.

நாமக்கல்,

நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணிகளில் பல்வேறு நிலைகளில் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், தேர்தல் பணிகளை மேற்கொள்ள மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த அலுவலர்கள் தங்கள் பொறுப்பில் உள்ள 10 முதல் 15 வரையிலான வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு மற்றும் ஒப்புகை சீட்டை காண்பிக்கும் எந்திரங்களை போலீசாரின் பாதுகாப்புடன் கொண்டுசெல்லுதல், வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவிற்கான பொருட்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

அதேபோல் வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவில் தொடர்புடைய பொருட்களை பெற்று வந்து வாக்கு எண்ணும் இடத்தில் அளிப்பார்கள். இதற்கிடையே வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு தாங்கள் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து மண்டல அலுவலர்கள் பயிற்சி அளிப்பார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி மண்டல அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சி முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியம் பேசியதாவது:-

தேர்தல் பணிகளில் மண்டல அலுவலர்களுக்கான பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தது. தேர்தல் எளிதான முறையில் நடைபெற இங்கு வந்து உள்ள மண்டல அலுவலர்கள் அனைவரும் பயிற்சி வகுப்பினை சரியாக கவனித்து அதன் அடிப்படையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) சம்மந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் விரிவாக நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் வீடியோ மூலமாகவும், நேரடியாகவும் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு கலெக்டர் ஆசியா மரியம் பேசினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கிராந்தி குமார், மணிராஜ், துரை, சந்திரா, தேவிகாராணி, அழகர்சாமி மற்றும் கூடுதல் உதவி தேர்தல் நடத்்தும் அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story