பொள்ளாச்சி பாலியல் கொடுமைகளை அரசும், போலீசும் மூடி மறைக்க முயற்சி கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு


பொள்ளாச்சி பாலியல் கொடுமைகளை அரசும், போலீசும் மூடி மறைக்க முயற்சி கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 March 2019 4:00 AM IST (Updated: 15 March 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பாலியல் கொடுமைகளை அரசும், போலீசும் மூடி மறைக்க முயற்சி செய்கிறது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அங்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் மற்றும் கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் கனிமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொள்ளாச்சியில் நடந்த உள்ள பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள், வன்முறை சம்பவத்தை அரசும், போலீசும் மூடி மறைக்க பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. அது பெரிய அச்சத்தை உருவாக்கி வருகிறது. இது போன்ற சம்பவங்களால் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படும்போது, அவர்களின் பெயர்களை வெளியிடக்கூடாது என்று தெளிவாக உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.

ஆனால், அரசாணையில் கூட பாதிக்கப்பட்டவர்களின் பெயரை அரசு வெளியிட்டு உள்ளது. போலீசும் தொடர்ந்து பெயரை வெளியிட்டு வருகிறது. இது இனிமேல் யாரும் புகார் கொடுக்க கூடாது என்பதற்காக, அவர்களை அச்சுறுத்தவே செய்யக்கூடியதாக தோன்றுகிறது.

7 ஆண்டுகளாக பலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற சூழலில் 4 பேர் மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில் எந்த பெண் அதிகாரியும் ஈடுபடுத்தப்படவில்லை. இது பல கேள்விகளை எழுப்பக்கூடியதாக உள்ளது. தற்போது வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு உள்ளது. இதுவரை விசாரணையில் தாமதம் செய்து, போலீசும், அரசும் யாரை காப்பாற்ற நாடகம் நடத்திக் கொண்டு இருந்தார்கள் என்பது முக்கியமான கேள்வி. இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை தாண்டி, பாதிக்கப்பட்ட பெண்கள் வந்து புகார் தெரிவிக்கும் வகையில் தனியாக கோர்ட்டு ஏற்படுத்த வேண்டும்.

அ.தி.மு.க., பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து இருப்பதால் அவர்கள் பிரதமரை ‘டாடி’ என்று அழைக்கக்கூடிய நிலைக்கு சென்று உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டெய்னரில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட போதும் ஒழுங்காக விசாரணை நடத்தப்படவில்லை. தற்போது ஆங்காங்கே பணம் பறிமுதல் செய்யப்படுவது தொடர்பாக முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு கனிமொழி எம்.பி கூறினார். 

Next Story