கரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊடகங்களை கண்காணிக்க தனி அறை ஒதுக்கீடு


கரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊடகங்களை கண்காணிக்க தனி அறை ஒதுக்கீடு
x
தினத்தந்தி 14 March 2019 10:30 PM GMT (Updated: 14 March 2019 7:51 PM GMT)

“ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு” ஏற்படுத்தப்பட்டு கரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு தனிஅறை ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி தொலைக்காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பாகும் செய்திகளை கண்காணிக்கவும், அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் வெளியிடப்படுவதை குறித்து கொள்ளவும் மற்றும் விளம்பரங்களுக்கான சான்றிதழ் வழங்கும் பொருட்டும் “ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு” ஏற்படுத்தப்பட்டு கரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு தனிஅறை ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார். இந்த அறையில் உள்ள தொலைக்காட்சி பெட்டிகள் மூலம், கரூர் மாவட்டத்தில் ஒளிபரப்பாகும் கேபிள் டி.வி. சேனல்கள் மற்றும் இதர சேனல்களும் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்படும். கேபிள் டி.வி.களில் அரசியல் கட்சியினர் விளம்பரம் செய்ய விரும்பினால் முன்னதாகவே ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவில் அந்த வீடியோவை அளித்து ஒப்புதல் பெற வேண்டும். ஒவ்வொரு நாளும் எத்தனை முறை ஒளிபரப்பப்படுகின்றது என்பது கணக்கெடுக்கப்பட்டு, கணக்கீட்டுக்குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் செலவுக்கணக்கில் விளம்பரத்திற்கான செலவு சேர்க்கப் படும். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி (நிலம் எடுப்பு) சிவபிரியா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வ சுரபி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

Next Story