கச்சிராயப்பாளையம் அருகே, வாலிபருக்கு அரிவாள் வெட்டு; கை துண்டானது - தொழிலாளி கைது


கச்சிராயப்பாளையம் அருகே, வாலிபருக்கு அரிவாள் வெட்டு; கை துண்டானது - தொழிலாளி கைது
x
தினத்தந்தி 15 March 2019 4:15 AM IST (Updated: 15 March 2019 1:25 AM IST)
t-max-icont-min-icon

கச்சிராயப்பாளையம் அருகே வாலிபரை அரிவாளால் வெட்டியதில் கைது துண்டானது. இதுதொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள கரடிசித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி கருத்தாமணி. இவருக்கு கமலக்கண்ணன் (வயது 39), பாவாடை என்ற 2 மகன்கள் உள்ளனர். கருத்தாமணியின் பெயரில் அதே பகுதியில் 3 ஏக்கர் விளை நிலம் உள்ளது. அந்த நிலத்தை அவர் தனது மகன்களுக்கு சரிசமமாக பிரித்துக்கொடுக்க முடிவு செய்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அதே பகுதியில் வசிக்கும் கருத்தாமணியின் அண்ணன், கண்ணன் என்பவர் கமலக்கண்ணன், பாவாடை ஆகியோரிடம் கருத்தாமணியின் வாழ்வாதாரத்துக்கு தேவையான பணத்தை கொடுத்தால் மட்டுமே விளை நிலம், 2 பேருக்கும் பங்கு பிரித்து கொடுக்கப்படும் என்று கூறினார்.

இதை கேட்டு ஆத்திரமடைந்த கமலக்கண்ணன் நேற்று முன்தினம் மாலை கண்ணனின் வீட்டுக்கு சென்று, நீ உனது தங்கைக்கு ஆதரவாக பேசுகிறாய், நீ இருக்கும் வரை எனக்கு சொத்து கிடைக்காது என்று கூறி அவரை தாக்க முயன்றார். இதை பார்த்த கண்ணன் மகன் ராஜீவ்காந்தி(30), கமலக்கண்ணனை தடுத்தார்.

இதில் மேலும் ஆத்திரமடைந்த கமலக்கண்ணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜீவ்காந்தியை வெட்ட முயன்றார். அப்போது ராஜீவ்காந்தி கையால் தடுக்க முயன்ற போது, அவரது இடது கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் அவரது கை துண்டானது. உடனே கமலக்கண்ணன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ராஜீவ்காந்தியை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் வள்ளி, சப்-இன்ஸ்பெக்டர் கமல்ஹாசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தொழிலாளி கமலக்கண்ணனை கைது செய்தனர்.

Next Story