குடிசையில் பதுக்கிய சாமி சிலை மீட்பு தலைமறைவான தொழிலாளிக்கு வலைவீச்சு
ராயபுரத்தில், குடிசையில் பிளாஸ்டிக் சாக்குப்பையில் சுற்றி பதுக்கி வைத்து இருந்த உலோக சாமி சிலையை மீட்ட போலீசார், தலைமறைவான தொழிலாளியை தேடி வருகின்றனர்.
திருவொற்றியூர்,
சென்னை ராயபுரம் செட்டித்தோட்டம் குடிசை பகுதியில் உள்ள ஒரு குடிசையில் உலோகத்தால் ஆன சாமி சிலை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக அந்த பகுதியில் வசிக்கும் முருகம்மாள் என்ற பெண், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் தினகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர்.
அப்போது அங்குள்ள ஒரு குடிசையின் மேற்கூரையில் பிளாஸ்டிக் சாக்கு பையில் சுற்றப்பட்ட நிலையில் இருந்த சுமார் 3 அடி உயரம் கொண்ட, 60 கிலோ எடை கொண்ட உலோக சாமி சிலையை மீட்டனர்.
தொழிலாளி தலைமறைவு
இது குறித்து நடத்திய விசாரணையில், அந்த சிலையை ராயபுரம் பாலம் சர்வீஸ் பகுதியில் குப்பை சேகரிக்கும் கணேசன்(வயது 25) என்ற தொழிலாளிதான் இங்கு கொண்டு வந்து மறைத்து வைத்தது தெரியவந்தது.
அந்த சிலையை அவர், குப்பை சேகரிக்கும்போது குப்பைகளுக்கு இடையே கண்டெடுத்து இங்கு வந்து பதுக்கிவைத்தாரா? அல்லது இவரே ஏதாவது கோவிலில் இருந்து அந்த சிலையை திருடி வந்தாரா? என்பது தெரியவில்லை.
தலைமறைவாக உள்ள குப்பை சேகரிக்கும் தொழிலாளி கணேசனை போலீசார் தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால்தான் அந்த உலோக சாமி சிலையை திருடி, கடத்தி வந்தது யார்? என்பது போன்ற விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
சிலை கடத்தல் பிரிவு
குடிசையில் பதுக்கி வைத்து இருந்து உலோக சாமி சிலை மீட்கப்பட்டது குறித்து ராயபுரம் சிலை கடத்தல் பிரிவு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் வந்து பார்வையிட்ட பின்னர்தான், அது எந்த வகையான சிலை? என்பதும், அதன் மதிப்பு எவ்வளவு? என்பதும் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story