போர்க்குற்ற விசாரணைக்கு காலஅவகாசம் கேட்பதா? இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது
போர்க்குற்ற விசாரணைக்கு மேலும் காலஅவகாசம் கேட்கும் இலங்கை அரசை கண்டித்து சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
போர்க்குற்ற விசாரணைக்கு மேலும் காலஅவகாசம் கேட்கும் இலங்கை அரசை கண்டித்து ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், திராவிடர் விடுதலை கழக தலைவருமான கொளத்தூர் மணி தலைமை தாங்கினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, தமிழக வாழ்வுரிமை கட்சி துணை பொதுச்செயலாளர் து.வெ.வேணுகோபால், தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைமைக்குழு உறுப்பினர் தியாகு, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் மற்றும் எஸ்.டி.பி.ஐ., மனிதநேய மக்கள் கட்சி, தமிழர் விடுதலை கழகம், தமிழ் தேச மக்கள் கட்சி, தமிழ் தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
ஆதரிக்க கூடாது
ஆர்ப்பாட்டத்தின்போது தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கையில் நடந்த போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை அரசு மேலும் 2 ஆண்டுகள் காலஅவகாசம் கோரியுள்ளது. காலநீடிப்பு தருவது எந்தவிதத்திலும் தமிழர்களுக்கு தீர்வாக அமையாது. இந்த நிலைப்பாட்டுக்கு இந்தியா ஆதரவு தரக்கூடாது.
ஐ.நா. மன்றத்தில் இலங்கை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இன அழிப்பு சான்றுகளை அழியவிடாமல் காக்க ஒரு நடுநிலையான பன்னாட்டு நெறிமுறை அமைக்கவேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் தீர்மானத்தை ஐ.நா. மன்றத்தில் இந்தியா முன்மொழிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முற்றுகையிட முயற்சி
இதற்கிடையில் சிலர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர். இதுதொடர்பாக கூட்டமைப்பை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story