தமிழகம் முழுவதும் இ-சேவை மையங்களின் செயல்பாடு பாதிப்பு சான்றிதழ்கள் பெற முடியாமல் பொதுமக்கள் கடும் அவதி


தமிழகம் முழுவதும் இ-சேவை மையங்களின் செயல்பாடு பாதிப்பு சான்றிதழ்கள் பெற முடியாமல் பொதுமக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 14 March 2019 11:00 PM GMT (Updated: 14 March 2019 8:15 PM GMT)

தமிழகம் முழுவதும் அரசு பொது இ-சேவை மையங்களின் செயல்பாடு ஒரு மாதத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சான்றிதழ்கள் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

சென்னை, 

தமிழகம் முழுவதும் மாநகராட்சி தலைமை அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள், நகராட்சி, தாலுகா, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் அரசு பொது இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த மையங்கள் மூலம் இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், சாதி சான்றிதழ் போன்ற மத்திய, மாநில அரசுகளின் சார்பில் வழங்கப்படும் 80-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

செயல்பாடு பாதிப்பு

குறிப்பிட்ட சான்றிதழ் கோரி இ-சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் அனுப்பும் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிபார்த்து ஒப்புதல் அளித்ததும், அதற்கான சான்றிதழை இ-சேவை மையத்தின் மூலம் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

சான்றிதழ்களை மிக எளிமையான முறையில் இ-சேவை மையத்தின் மூலம் பெற முடிகிறது என்பதால் தினமும் ஏராளமானோர் இ-சேவை மையங்களுக்கு சென்று தங்களது பணியை முடித்துக்கொள்கின்றனர்.

ஆனால் கடந்த 1½ மாதமாக இ-சேவை மையத்தின் கணினி செயல்திறன் வேகம் மிக குறைவாக இருப்பதால் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க முடியாமல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள இ-சேவை மையங்களுக்கு சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க வருபவர்கள் அங்கு பணியாற்றும் அலுவலர்களுடன் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம்

சென்னை புரசைவாக்கம் வெங்கடாத்திரி தெருவில் உள்ள இ-சேவை மையத்தில் நேற்று சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க பலர் வந்திருந்தனர். கணினி செயல்திறன் வேக குறைவு காரணமாக விண்ணப்பிக்க முடியாத நிலை இருப்பதாக அங்கிருந்த பணியாளர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் இ-சேவை அலுவலகம் முன்பு நின்றபடி கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலைந்து சென்றனர்.

சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க வந்த மகேந்திரவர்மன் என்பவர் கூறும்போது, ‘வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக கடந்த 15 நாட்களாக அலைகிறேன். ஒவ்வொரு முறை வரும்போதும் சர்வர் பிரச்சினை இருப்பதால் விண்ணப்பிக்க முடியாது என்று பணியாளர் கூறி வருகிறார். இதனால், அடுத்தகட்டமாக செய்ய வேண்டிய பணிகளை செய்ய முடியாமல் பரிதவித்து வருகிறேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்’ என்றார்.

விரைவில் தீர்வு

அதேபோன்று நிர்மல் என்ற பெண் கூறும்போது, ‘எனது குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் பெற விண்ணப்பிக்க 20 நாட்களுக்கு மேலாக வந்து செல்கி றேன். இன்று வரை என்னால் விண்ணப்பிக்க முடியவில்லை. இதனால், பல நாட்களாக வேலைக்கு செல்ல முடியவில்லை. சாதி சான்றிதழ் இருந்தால் தான் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலையில் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்து வருகிறேன்’ என்றார்.

இதுகுறித்து அரசு பொது இ-சேவை மைய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘தமிழகம் முழுவதும் உள்ள இ-சேவை மையங்களில் உள்ள கணினியை கட்டுப்படுத்தும் பிரதான சர்வரின் செயல்திறன் சில வாரங்களாக குறைவாக இருக்கிறது. விண்ணப்பங்கள் அதிகம் பெறப்படும் நேரங்களில் மட்டுமே இதுபோன்ற பிரச்சினை ஏற்படும். தற்போது வழக்கமான விண்ணப்பங்கள் பெறும் நேரங்களிலும் இதுபோன்ற பிரச்சினை உள்ளது. இதற்கான காரணம் தெரியவில்லை. இதை கண்டுபிடிப்பதற்காக ஐ.ஐ.டி.யை சேர்ந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஆய்வு நடத்தி வருகிறது. விரைவில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்’ என்றார்.

இதேபோல் சென்னை மாநகராட்சி அடையாறு மண்டல அலுவலகத்திலும் கடந்த 10 நாட்களாக இ-சேவை மையம் முடங்கியதால் விரக்தி அடைந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று அங்கிருந்த பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபடவும் முயன்றனர். அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து கலைந்து போக செய்தனர்.

Next Story