மக்களை ஏமாற்ற தேவேகவுடா குடும்பத்தினர் முதலை கண்ணீர் வடிக்கிறார்கள் எடியூரப்பா கடும் தாக்கு


மக்களை ஏமாற்ற தேவேகவுடா குடும்பத்தினர் முதலை கண்ணீர் வடிக்கிறார்கள் எடியூரப்பா கடும் தாக்கு
x
தினத்தந்தி 14 March 2019 10:45 PM GMT (Updated: 14 March 2019 8:21 PM GMT)

மக்களை ஏமாற்ற தேவேகவுடா குடும்பத்தினர் முதலை கண்ணீர் வடிக்கிறார்கள் என்று எடியூரப்பா கூறினார்.

சிக்கமகளூரு,

முன்னாள் முதல்-மந்திரியும், கர்நாடக பா.ஜனதா தலைவருமான எடியூரப்பா நேற்று சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரிக்கு வந்தார். அவர் சிருங்கேரி சாரதம்மா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர், சிருங்கேரி மடத்தின் மடாதிபதி பாரதி தீர்த்த சங்கராச்சாரியை சந்தித்து ஆசிப்பெற்றார். இதையடுத்து எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா முழுவதும் மீண்டும் மோடி அலை அதிகரித்து உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலை விட இந்த தடவை 12 சதவீதம் கூடுதலாக வாக்குகள் வாங்குவோம் என்று நம்பிக்கை உள்ளது. அனைத்து கருத்து கணிப்புகளும் மோடியே மீண்டும் பிரதமராவார் என்று கூறுகின்றன. கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் தயாராகி உள்ளது. கட்சி மேலிடம் ஒப்புதல் வழங்கிய பிறகு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

வருகிற 17-ந்தேதி பா.ஜனதா கூட்டம் நடக்கிறது. இதனால் இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். கர்நாடகத்தில் 22 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும்.

மண்டியாவில் வேட்பாளர்கள் நிறுத்துவது குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. சுமலதாவின் முடிவை பொறுத்து நாங்கள் அங்கு வேட்பாளரை தேர்வு செய்வோம். அம்பரீஷ் என்னுடைய நண்பர் என்று குமாரசாமி கூறி வந்தார். ஆனால் தற்போது அம்பரீஷ், மண்டியா மாவட்ட மக்களுக்காக என்ன செய்தார் என்று அவர் கூறுகிறார். அம்பரீஷ் பற்றி குமாரசாமி தரக்குறைவாக பேசி உள்ளதால் மண்டியா மக்கள் அவர் மீது ஆத்திரமடைந்துள்ளனர்.

காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் இடையே தொகுதியை பங்கீட்டு கொள்வதில் பிரச்சினை நிலவுகிறது.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தேவேகவுடா குடும்பத்தினர் முதலை கண்ணீர் வடிக்கிறார்கள். மக்களை அவர்கள் ஏமாற்றுகிறார்கள். இந்த நடிப்பை மக்கள் நம்பமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story