தஞ்சை அருகே கரும்பு தோட்டத்தில் கொத்தடிமையாக இருந்த 23 பேர் மீட்பு விழுப்புரம், கடலூரை சேர்ந்தவர்கள்


தஞ்சை அருகே கரும்பு தோட்டத்தில் கொத்தடிமையாக இருந்த 23 பேர் மீட்பு விழுப்புரம், கடலூரை சேர்ந்தவர்கள்
x
தினத்தந்தி 15 March 2019 3:45 AM IST (Updated: 15 March 2019 2:08 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே கரும்பு தோட்டத்தில் கொத்தடிமையாக இருந்த விழுப்புரம், கடலூரை சேர்ந்த 23 பேரை மீட்டனர்.

தஞ்சாவூர்,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுகா நாயக்கர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. விவசாயி. இவர் தஞ்சையை அடுத்த குருங்குளத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். கரும்பு நன்றாக விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது.

இதனால் கரும்பு தோட்டத்தில், கரும்பு வெட்டுவதற்காக தொழிலாளிகள் தேவைப்படுகிறது என கடலூர் மாவட்டம் திருவிதிகையை சேர்ந்த முகவர் சேகரை புண்ணியமூர்த்தி தொடர்பு கொண்டார். உடனே சேகரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 11 குடும்பங்களை சேர்ந்த 23 பேரை குருங்குளத்திற்கு அழைத்து வந்தார்.

இவர்கள் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இந்தநிலையில் கரும்பு வெட்டும் தொழிலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 23 பேரும் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வருவதாக புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணிக்கு தகவல் கிடைத்தது. அவர், தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் சுரேசுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலகு ஒருங்கிணைப்பாளர் நடராஜன், தேசிய ஆதிவாசி தோழமை கழக ஒருங்கிணைப்பாளர் ராணி, ஆய்வாளர் முத்துக்கண்ணன் ஆகியோர் நேற்று குருங்குளத்திற்கு சென்று அங்கு கொத்தடிமைகளாக இருந்த 23 பேரை மீட்டனர்.

இவர்களில் 10 ஆண்கள், 5 பெண்கள், 8 குழந்தைகள் அடங்குவர். இவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, முகவர் சேகரிடம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை கடன் பெற்றதால் கொத்தடிமையாக வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரிய வந்தது. இவர்கள் மீட்கப்பட்ட தகவல் அறிந்தவுடன் சேகர் தலைமறைவாகிவிட்டார். அவர் மீது ஆந்திரா, திண்டிவனம் போலீஸ் நிலையங்களில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட 23 பேரும் தஞ்சை காந்திசாலையில் உள்ள சத்திரம் தங்கும் விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டு இரவு தங்க வைக்கப் பட்டனர்.

இவர்களுக்கு விடுதலை பத்திரம் வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் கூறும்போது, இன்னும் சிலர், கொத்தடிமையாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் நேரில் ஆய்வு செய்து அவர்களை எல்லாம் மீட்டு அனைவரையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொத்தடிமையாக மீட்கப்பட்டவர்கள் ஒரு மாதம் மட்டுமே தனது சொந்த ஊரில் இருப்பார்கள். மற்ற நாட்களில் தஞ்சை, ஆந்திரா என பல்வேறு ஊர்களுக்கு அழைத்து செல்லப்பட்டு கொத்தடிமையாக பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றார்.

Next Story