பொள்ளாச்சி பாலியல் வழக்கு முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை - ஆவணங்கள் சிக்கின


பொள்ளாச்சி பாலியல் வழக்கு முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை - ஆவணங்கள் சிக்கின
x
தினத்தந்தி 14 March 2019 10:45 PM GMT (Updated: 14 March 2019 8:47 PM GMT)

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை செய்து ஆவணங்களை கைப்பற்றினர்.

கோவை,

பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த நிதிநிறுவன அதிபர் திருநாவுக்கரசு (வயது 27), அவருடைய நண்பர்கள் என்ஜினீயர் சபரிராஜன் (27), சதீஷ் (27) மற்றும் வசந்தகுமார் (27) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களின் பின்னணியில் மேலும் சிலர் இருப்பதாகவும், அவர்களை தப்பிக்க வைக்க போலீசார் முயற்சி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை வேறு பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்றும், பெண் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்தது. இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது.இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் மற்றும் போலீசார் அதிரடி விசாரணையை தொடங்கினர். இவர்கள் ஆனைமலை அருகே சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த பண்ணை வீட்டில் திருநாவுக்கரசு உள்பட 4 பேரும் சேர்ந்து பல பெண்களை அழைத்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து நேற்று மாலை 2-வது நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதற்காக இவர்கள் பொள்ளாச்சியை அடுத்த மாக்கினாம்பட்டியில் திருநாவுக்கரசுக்கு சொந்தமான வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர். அங்கு திருநாவுக்கரசு பாட்டியும், பெரியம்மாவும் இருந்தனர். அவர்களிடம் வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் வீட்டில் உள்ள அறைகள், அங்கிருந்த பீரோக்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த செல்போன்கள், மடிக்கணினி, ஆகியவற்றை கைப்பற்றினர்.

இதற்கிடையில் வெளியே சென்றிருந்த திருநாவுக்கரசின் தாயார் லதா வீட்டுக்கு வந்தார். உடனே போலீசார் அவரிடமும் துருவித்துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர்களுக்கு சொந்தமான சின்னப்பம்பாளையத்தில் உள்ள வீடு குறித்த விவரங்களையும் கேட்டறிந்தனர். அந்த வீட்டுக்கு எப்போது எல்லாம் சென்று வருவீர்கள் என்று கேள்வி கேட்டனர். பின்னர் கைப்பற்றிய ஆவணங்களை கொண்டு சென்றனர். இந்த விசாரணை சுமார் 4 மணி நேரம் நீடித்தது. இந்த விசாரணை காரணமாக திருநாவுக்கரசு வீடு இருக்கும் பகுதியில் பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் திரண்டனர். ஆனால் அவர்கள் யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்க வில்லை. வீட்டை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாலை 3.30 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை இரவு 7 மணி வரை நீடித்தது.

Next Story