கேட்பாரற்று கிடந்த பையினால் வடலா ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு பீதி போலீசார் சோதனையால் பரபரப்பு


கேட்பாரற்று கிடந்த பையினால் வடலா ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு பீதி போலீசார் சோதனையால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 March 2019 3:30 AM IST (Updated: 15 March 2019 2:32 AM IST)
t-max-icont-min-icon

வடலா ரெயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையினால் வெடிகுண்டு பீதி உண்டானது. அங்கு போலீசார் நடத்திய சோதனையால் பரபரப்பு உண்டானது.

மும்பை,

மும்பை வடலா ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு பிளாட்பாரத்தில் நேற்று மதியம் 12 மணி அளவில் ஒரு பை கேட்பாரற்று கிடந்தது. வெகுநேரமாக அந்த பை அங்கேயே கிடந்ததை பயணிகள் கவனித்தனர். இதனால் அதில் வெடிகுண்டு இருக்குமோ என்ற பீதி பயணிகள் இடையே பரவியது.

உடனடியாக இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் மற்றும் வெடிகுண்டு பிரிவு போலீசார் மோப்பநாயுடன் விரைந்து வந்தனர்.

பயணிகள் பை கிடந்த இடத்தின் அருகே வந்து விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் வடலா ரெயில் நிலையத்திற்கு வரும் ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து மிகவும் கவனமுடன் வெடிகுண்டு பிரிவு போலீசார் அந்த பையை பிரித்து சோதனை நடத்தினர். அப்போது, அதில் துணிகள் தான் இருந்தன. பயப்படும்படியாக வெடிபொருட்கள் ஏதும் இல்லை. இதையடுத்து பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இதன்பின்னர் ரெயில்கள் வடலா ரெயில் நிலையத்துக்குள் வர அனுமதிக்கப்பட்டன. வெடிகுண்டு பீதியை ஏற்படுத்திய அந்த பையை போட்டு சென்ற நபர் யார்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தால் நேற்று வடலா ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story