சாலை சிக்னலில் சிவப்பு விளக்கு பலரின் உயிரை காப்பாற்றியது நடைமேம்பால விபத்தை நேரில் பார்த்தவர் உருக்கம்


சாலை சிக்னலில் சிவப்பு விளக்கு பலரின் உயிரை காப்பாற்றியது நடைமேம்பால விபத்தை நேரில் பார்த்தவர் உருக்கம்
x
தினத்தந்தி 14 March 2019 11:15 PM GMT (Updated: 14 March 2019 9:24 PM GMT)

ரெயில்வே நடைமேம்பாலம் இடிந்து 5 பேர்பலியான சம்பவத்தில் பலரின் உயிரை சாலைசிக்னலில் எரிந்த சிவப்புவிளக்கு காப்பாற்றியதாக நேரில் பார்த்தவர் தெரிவித்தார்.

மும்பை,

மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலைய நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தின்போது கீழே உள்ள சாலை சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்துகொண்டு இருந்தது. இதனால் நடைமேம்பலத்திற்கு கீழே கடந்து செல்ல பச்சை விளக்கிற்காக மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் காத்திருந்தவர்கள் உயிர்பிழைந்தனர். அந்த சமயத்தில் நடைமேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் போக்குவரத்து இருந்திருந்தால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும்.

இதுகுறித்து சாலையில் சிக்னலுக்காக வாகனத்தில் காத்து நின்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியதாவது:-

சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் காத்திருந்தோம். பச்சை விளக்கு எரிவதற்குள் பெரும் விபத்து நடந்து முடிந்துவிட்டது. சற்று முன்பு சிக்னல் விளக்கு பச்சையாக மாறியிருந்தால் நிலைமை வேறுமாதிரி ஆகியிருக்கும்.

இந்த நேரத்தில் ஏராளமானோர் வீட்டுக்கு செல்லும் அவசரத்தில் இருந்தனர். நானும் வீட்டிற்கு விரைவாக செல்ல விரும்பினேன். ஆனால் தற்போது ஒரே ஒரு சிகப்பு விளக்கு எங்களை காப்பாற்றியதாக உணர்கிறேன். இல்லையெனில் நானும் காயம் அடைந்திருக்கலாம். அல்லது உயிர் இழந்து இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

“சத்தம் தான் கேட்டது, 2 நிமிடம் எதையும் பார்க்க முடியவில்லை” விபத்தை நேரில் பார்த்தவர் பேட்டி

மும்பை சி.எஸ்.எம்.டி.யில் நடைமேம்பாலம் இடிந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலத்தில் நேற்று காலை பழுது நீக்கும் பணி நடந்ததாக இந்த விபத்தை பார்த்த ஒருவர் தெரிவித்தார். மேலும் பயணிகளை அனுமதித்தவாறே இந்த பணிகள் நடைபெற்று வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொருவர் கூறுகையில், “நடைமேம்பாலம் இடிந்து விழுந்த போது பயங்கர சத்தம் தான் கேட்டது. அருகே சென்றபோது நடைபாலம் இடிந்து புகையாக காட்சியளித்தது. 2 நிமிடங்கள் எதையும் பார்க்க முடியவில்லை. சில நிமிடங்கள் கழித்து தான் சாலையில் பலர் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து துடிப்பதை பார்த்தோம். அவர்களை உடனடியாக மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டோம்” என்றார்.

பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் முதல்-மந்திரி பட்னாவிஸ் அறிவிப்பு

மும்பை சி.எஸ்.எம்.டி.யில் நடைமேம்பாலம் இடிந்து 5 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வேதனை தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சி.எஸ்.எம்.டி.யில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்து 5 பேர் பலியான சம்பவத்தை அறிந்து வேதனை அடைந்தேன். ரெயில்வேயுடன் இணைந்து விரைவான நிவாரண பணிகளை மேற்கொள்ள மும்பை மாநகராட்சி கமிஷனர், மும்பை போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே நடைமேம்பாலம் இடிந்து விழுந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

Next Story