விதவை அடித்து கொலை, பள்ளி ஆசிரியை உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை - கடலூர் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு


விதவை அடித்து கொலை, பள்ளி ஆசிரியை உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை - கடலூர் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 14 March 2019 10:45 PM GMT (Updated: 14 March 2019 9:39 PM GMT)

கடலூர் அருகே விதவையை அடித்து கொலை செய்த வழக்கில் தனியார் பள்ளி ஆசிரியை உள்பட 6 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பு பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர்,

கடலூர் அருகே உள்ள குடிகாட்டை சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது 55). இவர் தனது மகள் விஜயாவை(32) முகிலன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். முகிலன் இறந்து விட்டதால் விஜயா தனது மகளுடன் குடிகாட்டில் உள்ள தந்தை பக்கிரிசாமியின் வீட்டில் வசித்து வந்தார்.

அவர்களுடைய பக்கத்து வீட்டில் கலியமூர்த்தி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 14-8-2015 அன்று கலியமூர்த்தி தனது வீட்டை கழுவியபோது வெளியேறிய கழிவுநீர், பக்கத்துவீட்டில் உள்ள பக்கிரிசாமி வீட்டின் முன்பு தேங்கியது.

இதை பக்கிரிசாமி தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த கலியமூர்த்தி, பக்கிரிசாமியையும், அவரது மனைவி கமலாவையும் அடித்துள்ளார். இதில் காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் முதுநகர் போலீசில் புகார் அளிக்கப்பட்ட போதும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

மறுநாள் காலையில் விஜயா பொதுக்குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க குடத்துடன் சென்ற போது, அவரை கலியமூர்த்தி திட்டி, இரும்பு கம்பியால் தாக்கி உள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த விஜயா, நிலை குலைந்து கீழே விழுந்தார். உடனே கலியமூர்த்தியின் மனைவி மற்றும் அவரது அண்ணன் முருகன் குடும்பத்தினர் செங்கற்களால் விஜயாவை சரமாரியாக தாக்கினார்கள்.

அதனை தடுத்த விஜயாவின் தம்பி வெங்கடாஜலபதி, சகோதரி தமயந்தி, அவரது கணவர் சிவலிங்கம், உறவினர் சிவகுமார் ஆகியோரும் தாக்குதலில் காயம் அடைந்தனர்.

தாக்குதலில் தலையிலும், வயிற்றிலும் காயமடைந்த விஜயா, கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி 16-8-2015 அன்று அதிகாலை விஜயா பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக கடலூர் முதுநகர் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு வழக்குப்பதிவு செய்து கலியமூர்த்தி(38), அவரது மனைவி விஜயலட்சுமி(31), கலியமூர்த்தியின் அண்ணன் முருகன்(47), அவரது மனைவி ஜெயா(40), மகன்கள் ஜெகன்(21), அபினேஷ்(19) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பு கூறினார்.

முன்னதாக நீதிபதி டி.லிங்கேஸ்வரன் தீர்ப்பை வாசிக்கும் முன்பு கூறுகையில், கடந்த 14-8-2015 அன்று நடந்த தகராறின் போதே போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருந்தால் கொலை வரை போயிருக்காது என்று குறிப்பிட்டார்.

பின்னர் அவர் தீர்ப்பை வாசித்தார். அதில் குற்றவாளிகள் கலியமூர்த்தி, விஜயலட்சுமி, முருகன், ஜெயா, ஜெகன், அபினேஷ் ஆகிய 6 பேருக்கும் ஆயுள் தண்டனையும், கலியமூர்த்திக்கு 12,500 ரூபாய் அபராதமும், மற்ற 5 பேருக்கும் தலா ரூ.7,500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட விஜயலட்சுமி கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். ஜெகனும், அபினேசும் கல்லூரி மாணவர்களாவார்கள்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் க.செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.

Next Story