பொள்ளாச்சி பாலியல் வன்முறை: கல்லூரி மாணவிகள்-வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


பொள்ளாச்சி பாலியல் வன்முறை: கல்லூரி மாணவிகள்-வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 March 2019 4:30 AM IST (Updated: 15 March 2019 3:22 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சையில் கல்லூரி மாணவிகள்-வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்,

பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களை ஏமாற்றி அவர்களை ஆபாச படம் எடுத்து பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் பாகுபாடு இன்றி கைது செய்ய வேண்டும். குற்றவாளிகளின் பின்புலத்தில் அரசியல்வாதிகள் இருந்தாலும் அவர்கள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியே கூறிய போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை குந்தவைநாச்சியார் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர்.பின்பு கல்லூரியின் முன்பு மாணவிகள் அமர்ந்து பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு இந்திய மாணவர் சங்க கிளை செயலாளர் சோபியா தலைமை தாங்கினார். இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.

அதேபோல தஞ்சை கோர்ட்டு முன்பு சாலையின் குறுக்கே நின்று தஞ்சை வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு வக்கீல் விஜயபிரியா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், பொள்ளாச்சி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் கடுமையான சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐகோர்ட்டு பெண் நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் வக்கீல்கள் சிவசுப்பிரமணியன், நல்லதுரை, அன்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story