திருமணமான 5 மாதங்களில் தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை


திருமணமான 5 மாதங்களில் தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை
x
தினத்தந்தி 15 March 2019 3:45 AM IST (Updated: 15 March 2019 3:24 AM IST)
t-max-icont-min-icon

திருமணமான 5 மாதங்களில் தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது பற்றி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கரிக்காடு ஸ்டேட் பாங்க் காலனி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது30). ஆசாரி. இவருக்கும், அதிராம்பட்டினம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த நடராஜன் மகள் சீதளாதேவி (23) என்பவருக்கும் 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் சீதளாதேவி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். சம்பவத்தன்று அவருடைய கணவர் சக்திவேல் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். சீதளாதேவியின் மாமியார் பூ வாங்குவதற்காக கடைக்கு சென்றிருந்தார். அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது சீதளாதேவி தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதுபற்றி தகவல் அறிந்த பட்டுக்கோட்டை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சீதளாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சீதளாதேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து சீதளாதேவியின் தந்தை நடராஜன் பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சீதளாதேவிக்கு திருமணமாகி 5 மாதங்களே ஆவதால் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது பற்றி பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பூங்கோதை விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story