கொலை வழக்கில் தேடப்பட்ட 3 பேரை துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர் பயங்கர ஆயுதங்களும் பறிமுதல்


கொலை வழக்கில் தேடப்பட்ட 3 பேரை துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர் பயங்கர ஆயுதங்களும் பறிமுதல்
x
தினத்தந்தி 14 March 2019 9:45 PM GMT (Updated: 14 March 2019 11:04 PM GMT)

கொலை வழக்கில் தேடப்பட்ட 3 பேரை துப்பாக்கிச்சூடு நடத்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்தார். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அலங்காநல்லூர், 

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் மாரி (வயது 38). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 6-ந் தேதி இரவு ஒரு கும்பலால் மாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. மதுரை மற்றும் பல்வேறு இடங்களில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலமேடு அருகே சரந்தாங்கி மலைப்பகுதியில் சிலர் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் அவனியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்செல்வம் தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மலையில் பதுங்கியிருந்த 5 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்தனர். அவர்கள் பயங்கர ஆயுதங்களால் போலீசாரை கொலை செய்வதாக மிரட்டி தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்செல்வம், தன்னை தற்காத்து கொள்வதற்காக கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு எச்சரிக்கை செய்தார். அதை தொடர்ந்து போலீசார், ஜெய்ஹிந்த்புரம், சோலையழகுபுரத்தை சேர்ந்த ரஞ்சித்குமார்(24), சிலைமானை சேர்ந்த வினுசக்கரவர்த்தி(23), விருதுநகர் நரிக்குடியை சேர்ந்த கார்த்திக் என்ற அகோரிகார்த்திக்(23) ஆகிய 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். அங்கிருந்து வெள்ளையம்பட்டியை சேர்ந்த அழகர், ராமர் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். விசாரணையில், மேற்கண்ட 5 பேரும்தான் மாரி கொலை வழக்கில் தேடப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது.

இது குறித்து அவனியாபுரம் போலீசார், பாலமேடு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இருவரையும் தேடிவருகின்றனர். மேலும் துப்பாக்கிச்சூடுக்கு பயன்படுத்திய கைத்துப்பாக்கியை சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்செல்வம் பாலமேடு போலீசாரிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story