முதியோர் இல்லத்தில் வாக்காளர் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி குறித்து விழிப்புணர்வு கலெக்டர் பங்கேற்பு


முதியோர் இல்லத்தில் வாக்காளர் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி குறித்து விழிப்புணர்வு கலெக்டர் பங்கேற்பு
x
தினத்தந்தி 15 March 2019 3:15 AM IST (Updated: 15 March 2019 4:34 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை முதியோர் இல்லத்தில் வாக்காளர் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் கந்தசாமி பங்கேற்றார்.

திருவண்ணாமலை, 

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முதன் முறையாக வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி பயன்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு வகையில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் உள்ள முதியோர் இல்லத்தில் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு இந்த கருவி குறித்து இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு விளக்கி கூறினார். பின்னர் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து முதியவர்களையும் இந்த கருவி பரிசோதித்து பார்க்கும்படி கலெக்டர் கூறினார். பின்னர் முதியவர்களும் இந்த கருவியை உபயோகித்து பார்த்தனர்.

தொடர்ந்து திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் 100 சதவீதம் வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. இதில் கலெக்டர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை முதலில் தனது காரிலும், பின்னர் அரசு பஸ்களிலும் ஒட்டினார்.

தொடர்ந்து வாக்களிப்பது குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு நடன நிகழ்ச்சியை கலெக்டர் பார்வையிட்டார். பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ராக்கியை கட்டிவிட்டு அனைத்து ஜனநாயக படி வாக்களிக்க வேண்டும் என்றார்.

மேலும் பஸ் நிலையத்திலும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி, தாசில்தார் மனோகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story