திருப்புல்லாணி கோவிலில் புதைந்திருந்த பாண்டியர் கால கல்வெட்டுகளை மாணவர்கள் கண்டுபிடித்தனர்
ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவிலில் புதைந்த நிலையில் இருந்த பாண்டியர் கால கல்வெட்டுகளை பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்தனர்.
ராமநாதபுரம்,
திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவிலில் உள்ள பட்டாபிஷேக ராமர் சன்னிதியின் தெற்கு வெளிப்புற சுவர், மூன்றாம் பிரகாரம் ஆகிய இடங்களில் சுவரின் அடிப்பகுதியில் மண்ணில் புதைந்த நிலையில் கல்வெட்டுகள் இருந்ததை திருப்புல்லாணி சுரேஷ்-சுதா-அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தை சேர்ந்த மாணவர்கள் கண்டுபிடித்தனர். இவை கி.பி.13-ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகள் ஆகும்.
இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு கூறியதாவது:- திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் துண்டுக்கல்வெட்டுகள் ஆகும். இதில் ஒன்று கோனேரி மேல் கொண்டான் எனும் அரசாணை கல்வெட்டு. மூன்று கல்வெட்டுகளில் உலக முழுதுமுடையார் என்பவர் பெயர் உள்ளது. அவர் வீரபாண்டியன் சந்தி, சதயத் திருநாள், தேவதானம் ஆகியவற்றிற்காக நிலங்களை இக்கோவிலுக்கு தானமாக வழங்கியுள்ளார்.
திருப்புல்லாணி கோவிலில் வீரபாண்டியன் சந்தி எனும் ஒரு பூஜைக்கட்டளையை உருவாக்கி அதற்கு உலகு சிந்தாமணி வளநாட்டு அமுதகுணமங்கலம் என்ற ஊரை அவர் தானமாக கொடுத்துள்ளார். உலகு சிந்தாமணி வளநாடு என்பது சாயல்குடி பகுதி ஆகும். சாயல்குடி அருகில் உள்ள திருமாலுகந்தான்கோட்டை சிவன் கோவில் கல்வெட்டுகளில் அவ்வூர் பெயர் அமுதகுணமங்கலம் எனவும், அளற்று நாட்டில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இக்கல்வெட்டில் அவ்வூர் உலகுசிந்தாமணி வளநாட்டை சேர்ந்ததாக கூறப்பட்டுள்ளது. இக்கோவிலில் சதயத்திருநாள் கொண்டாடுவதற்கு வேண்டிய திருப்படிமாற்று உள்ளிட்ட பொருட்களுக்காக நீர் சூழ்ந்த நிலமும், கருஞ்செய்யும் நீக்கி மீதமுள்ள நிலத்தை இவர் தானமாக வழங்கிய செய்தி ஒருகல்வெட்டில் உள்ளது. தானமாக வழங்கப்பட்ட ஊர்ப்பெயர் அதில் இல்லை.
மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கல்வெட்டில் இக்கோவில் பூஜைக்கு வேண்டிய நிமந்தங்களுக்கு வரி நீக்கப்பட்ட நிலத்தை இவர் தேவதானமாக வழங்கியுள்ளதை அறிய முடிகிறது. இக்கல்வெட்டுகளில் சொல்லப்படும் உலக முழுதுமுடையார் என்பவர் கி.பி.1253 முதல் கி.பி.1283 வரை ஆண்ட முதலாம் சடையவர்மன் வீரபாண்டியனின் பட்டத்தரசி ஆவார். மன்னன் நலமாக வாழ அவன் பெயரில் ஒரு சந்தியும், அவன் சதய நட்சத்திரத்தில் பிறந்தவன் என்பதால் அதை சதயத்திருநாளாக கொண்டாடவும் தேவையான தானங்களை இக்கோவிலுக்கு அவர் வழங்கியுள்ளார். எனவே இதில் உள்ள சில கல்வெட்டுகள் முதலாம் சடையவர்மன் வீரபாண்டியன் காலத்தை சேர்ந்தவை என்பது உறுதியாகிறது.
திருமலை ரகுநாத சேதுபதி காலத்தில் இக்கோவிலின் பல பகுதிகள் பழுதுபார்க்கப்பட்டுள்ளதாக தளசிங்கமாலை என்ற நூல் கூறுகிறது. அச்சமயத்தில் கோவில் மறுகட்டுமானத்தின் போது பல கல்வெட்டுகள் இடம் மாறியிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். கல்வெட்டு படியெடுக்கும் நிகழ்ச்சியில் வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளி கணிதஆசிரியர் முனியசாமி, ராமநாதபுரம் சாந்தக்குமார், திருப்புல்லாணி தொன்மை பாதுகாப்பு மன்றத்தை சேர்ந்த விசாலி, பிரவீணா, மனோஜ், தர்ஷினி ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story