மாவட்ட செய்திகள்

வாக்குப்பதிவு எந்திரம் பழுதானால் என்ன செய்ய வேண்டும்? தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி + "||" + Polling machine Defects What should be done Training for Election Officers

வாக்குப்பதிவு எந்திரம் பழுதானால் என்ன செய்ய வேண்டும்? தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி

வாக்குப்பதிவு எந்திரம் பழுதானால் என்ன செய்ய வேண்டும்? தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி
வாக்குப்பதிவின் போது எந்திரம் பழுதானால் உடனே என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
சிவகாசி,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதுவரை நடந்த தேர்தல்களை காட்டிலும் இந்த நாடாளுமன்ற தேர்தல் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஏன் என்றால் வாக்காளர்கள், தான் எந்த சின்னத்துக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை எந்திரம் மூலம் சரி பார்த்துக்கொள்ளலாம்.

இந்த எந்திரத்தில் ஒவ்வொரு வாக்காளர்களும் வாக்களித்த பின்னர் அவர் எந்த சின்னத்துக்கு வாக்களித்தார் என்பதை 7 நொடிகள் திரையில் பார்வையிடும் வசதி உள்ளது. இந்த வசதி வாக்காளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குப்பதிவுக்கு எந்திரம் பயன்படுத்தி வருவதால் பல நேரங்களில் வாக்கு எந்திரம் பழுது ஏற்படும் போது சில நிமிடங்கள் வாக்குப்பதிவு தடைபடும். பின்னர் வாக்கு எந்திரம் சம்பந்தப்பட்டஅதிகாரிகளை கொண்டு சரி செய்த பின்னர் வாக்குப்பதிவு மீண்டும் நடைபெறும். ஆனால் இந்த தேர்தலில் வாக்கு எந்திரம் பழுதானால் உடனே அந்த வாக்கு எந்திரம் உள்ளிட்ட 3 எந்திரங்களை அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றிவிட்டு வேறு எந்திரங்கள் வாக்குப்பதிவுக்கு வைக்கப்படும்.

பழுதான எந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணிக்கையில் சேர்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முன்பெல்லாம் வாக்கு எந்திரம் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் கருவி ஆகியவைகளில் எது பழுது ஏற்படுகிறதோ அதை மட்டும் மாற்றினால் போதும், தற்போது நடைபெற உள்ள தேர்தலில் ஒரு எந்திரம் பழுதானாலும் 3 எந்திரங்களை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.

வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவி, வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை எந்திரம் ஆகியவைகளின் ஏற்படும் குறைகளை கண்டுபிடிப்பது எப்படி? மற்றும் அதனை சரி செய்வது எப்படி என்பது குறித்து மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று காலை சிவகாசி தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. தினகரன் தலைமையில் நடைபெற்றது. தாசில்தார் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பயிற்சியாளர் சுந்தரபாரதி, மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு உரிய பயிற்சி அளித்தார். இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். வாக்குப்பதிவு எந்திரத்தை கையாளுவதில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து பயிற்சியாளர் எடுத்துக்கூறினார். எந்திரம் பழுதானால் அடுத்த 10 நிமிடத்தில் அந்த எந்திரம் மாற்றப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற வேண்டியது குறித்தும் விளக்கினார்.