எண்ணெய் ஆலையில் ரூ.33 லட்சம் கையாடல் ஊழியருக்கு வலைவீச்சு


எண்ணெய் ஆலையில் ரூ.33 லட்சம் கையாடல் ஊழியருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 15 March 2019 4:15 AM IST (Updated: 15 March 2019 4:35 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே சமையல் எண்ணெய் தயாரிப்பு ஆலையில் ரூ.33 லட்சம் கையாடல் செய்த ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தேனி,

தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டியில் பூதிப்புரம் சாலையில் தனியார் சமையல் எண்ணெய் தயாரிப்பு ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையின் உரிமையாளர் உதயகுமார். இந்த ஆலையில், போடி கீழராஜவீதியை சேர்ந்த சதீஷ்குமார் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

அவர் கணினி பயன்பாடுகளில் அனுபவம் பெற்று இருந்ததால், ஆலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி. வரி தொடர்பான வரவு செலவுகளை அவர் கவனித்து வந்தார்.

இந்நிலையில் போடியில் உள்ள ஒரு கடையில் இருந்து ஆலைக்கு வரவேண்டிய தொகை ஆலையின் கணக்கில் வரவு வைக்கப்படாமல் இருந்துள்ளது. காசோலை கிடைத்தும் அதை கணக்கில் செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதை அங்கு வேலை பார்க்கும் மற்றொரு ஊழியர் திரவியம் என்பவர், உதயகுமாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சதீஷ்குமாரை அழைத்து விசாரித்தார்.

அப்போது அவர் ரூ.3 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை தனது கணக்கிலும், தனது நண்பர்கள் கணக்கிலும் வரவு வைத்து இருந்தது தெரியவந்தது. மேலும், உதயகுமாரின் மகன், மகள் பெயரில் வங்கியில் சேமிப்பு வைப்புத் தொகை ரூ.19 லட்சத்து 70 ஆயிரத்து 602 செலுத்தி உள்ளதாக போலியான ரசீது தயாரித்து கொடுத்துள்ளார். அத்துடன், வருமான வரி, ஜி.எஸ்.டி. வரி செலுத்தியதாக ரூ.10 லட்சத்துக்கு போலியான ரசீதுகள் தயாரித்து கொடுத்து அந்த பணத்தையும் கையாடல் செய்துள்ளதாக தெரியவந்தது.

அந்த வகையில் மொத்தம் ரூ.33 லட்சத்து 18 ஆயிரத்து 602 தொகையை கையாடல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம், உதயகுமார் புகார் செய்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்தார்.

அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா, புகார் கூறப்பட்ட சதீஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். மேலும் அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story