எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது 45,386 மாணவ-மாணவிகள் எழுதினர்
நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நேற்று தொடங்கியது. இதில் 45 ஆயிரத்து 386 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
நெல்லை,
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எனப்படும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தமிழ் முதல் தாளுடன் நேற்று தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் 167 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. இதில் 21 ஆயிரத்து 71 மாணவர்களும், 24 ஆயிரத்து 315 மாணவிகளும் என மொத்தம் 45 ஆயிரத்து 386 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதில் 244 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள். அவர்களில் 167 பேருக்கு, அவர்கள் சொல்வதை எழுதுபவராக 167 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு எழுதினர். மேலும் 19 பார்வையற்ற மாணவ-மாணவிகளும் தேர்வு எழுதினர். பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில் 15 கைதிகள் தேர்வு எழுதினர்.
வழக்கமாக காலை நேரத்தில் தொடங்கும் இந்த தேர்வு பிளஸ்-1 பொதுத்தேர்வையொட்டி நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி நேற்று மதியம் 12 மணிக்கே மாணவ-மாணவிகள் அந்தந்த தேர்வு அறைகளுக்கு வந்தனர். அவர்கள் பள்ளிக்கூடம் முன்பும், பள்ளிக்கூட வளாகத்திலும் நின்று கொண்டே தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தனர்.
இந்த தேர்வுகளை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா ஆய்வு செய்தார். பாளையங்கோட்டையில் உள்ள சேவியர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பார்வையற்ற மாணவிகள் தேர்வு எழுதும் மையத்தையும் அவர் பார்வையிட்டார்.
இதுகுறித்து கலெக்டர் ஷில்பா கூறியதாவது:-
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் நல்லமுறையில் செய்யப்பட்டு உள்ளது. தேர்வு மையத்துக்கு மாணவ-மாணவிகள் எளிதாக செல்ல பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் மருத்துவ வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம், குடிநீர், கழிப்பிட வசதி செய்யப்பட்டு உள்ளது.
தேர்வு மையங்களில் 167 முதன்மை கண்காணிப்பாளர்களும், 11 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்களும், 167 துறை அலுவலர்களும், 2,632 அறை கண்காணிப்பாளர்களும், 10 பறக்கும் படை குழுவினர், 234 நிலையான படை உறுப்பினர்கள் மற்றும் 25 வழித்தட அலுவலர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்வு நேர்மையான முறையில் நடைபெறுவதை கண்காணிக்க பறக்கும் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற 29-ந் தேதி வரை நடைபெறுகிறது.
Related Tags :
Next Story