திருமண ஆசை வார்த்தை கூறி பெண் பாலியல் பலாத்காரம்; பஸ் கண்டக்டர் கைது - பொள்ளாச்சியில் மீண்டும் பரபரப்பு
திருமண ஆசைவார்த்தை கூறி, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பஸ் கண்டக்டரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் பொள்ளாச்சியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறி இருப்பதாவது:-
பொள்ளாச்சி,
பொள்ளாச்சியை அடுத்த நாதே கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (வயது 27) தனியார் பஸ் கண்டக்டர். இவரும் நெகமம் பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணும் நட்புடன் பழகி உள்ளனர். நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. இதனால் இருவரும் அடிக்கடி ஒருவரை ஒருவர் சந்தித்து காதலை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் திருமண ஆசைவார்த்தை கூறி பாலச்சந்திரன் அந்த பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். இதனை தொடர்ந்து பாலச்சந்திரன், அந்த பெண்ணிடம் கர்ப்பத்தை கலைத்துவிடு. இன்னும் சில மாதங்கள் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று உறுதி அளித்துள்ளார். இதனால் அவர் கர்ப்பத்தை கலைத்து விட்டார். இவ்வாறு அவர் 2 முறை கர்ப்பத்தை கலைத்துள்ளார்.
இந்த நிலையில் அந்த பெண் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியபோது, பாலச்சந்திரன் தட்டிக்கழித்துள்ளார். மேலும் அடிக்கடி திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினால் நாம் இருவரும் செல்போனில் பேசியது, இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூகவலை தளத்தில் வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டி உள்ளார். மேலும் பணமும் பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மன அழுத்தத்துடன் இருந்துள்ளார். வாழ்க்கையே கேள்விக்குறியான நிலையில் அடுத்து என்ன வழி என்று இருந்துள்ளார்.
பின்னர் அவர், துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும் என்று மனதுக்குள் எண்ணினார். இது குறித்து அவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில், திருமண ஆசைகாட்டி பாலியல் பலாத்காரம், பெண்கள் வன் கொடுமை தடுப்புசட்டம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாலச்சந்திரனை கைது செய்தனர். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பொள்ளாச்சியில் பாலியல் வன்முறை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மீண்டும் ஒரு பெண் புகார் கொடுத்து பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story