24 ஆயிரம் மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்


24 ஆயிரம் மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 15 March 2019 3:00 AM IST (Updated: 15 March 2019 4:35 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 24 ஆயிரம் மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்.

தூத்துக்குடி,

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நேற்று தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 300 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 11 ஆயிரத்து 888 மாணவர்கள், 12 ஆயிரத்து 180 மாணவிகள் ஆக மொத்தம் 24 ஆயிரத்து 68 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினர். 61 மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வு எழுதினர்.

இதற்காக மாவட்டம் முழுவதும் 102 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த ஆண்டு, மொழித்தாள் தேர்வுகள் அனைத்தும் பிற்பகலில் நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று தமிழ் முதல்தாள் தேர்வு நடந்தது. இந்த தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 4-45 மணிக்கு முடிவடைந்தது.

இந்த தேர்வை கண்காணிக்க 226 பறக்கும் படை உறுப்பினர்கள், 1351 அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்தும் பார்வையிட்டார். ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகேசன் உடன் இருந்தார்.

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 28 தேர்வு மையங்களில் 3 ஆயிரத்து 651 மாணவர்களும், 3 ஆயிரத்து 771 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 422 பேர் தேர்வு எழுதினர்.

கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் மாரியப்பன் தலைமையில், 45 பறக்கும் படை குழுவினர் தேர்வு மையங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். 

Next Story