தேவதானப்பட்டி அருகே, பறக்கும் படையோடு இணைந்து கலெக்டர் வாகன தணிக்கை
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேவதானப்பட்டி அருகே பறக்கும் படையினரோடு இணைந்து மாவட்ட கலெக்டரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
தேனி,
தேனி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பெரியகுளம், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு உரிய ஆவணங்கள் இன்றி பணம், பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன தணிக்கை நடப்பதை மாவட்ட கலெக்டரும், தேனி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான பல்லவி பல்தேவ் நேற்று முன்தினம் இரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர் ஆய்வு செய்த போது தேவதானப்பட்டி பகுதியில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அவர்களோடு இணைந்து கலெக்டரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
பின்னர், காட்ரோடு பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையை பார்வையிட்டார். அந்த குழுவுடன் சேர்ந்தும் கலெக்டர் வாகன தணிக்கை நடத்தினார். ஒவ்வொரு வாகனங்களையும் நிறுத்தி தீவிர சோதனை நடத்திய பின்னரே அனுமதித்தனர்.
வாகன சோதனையின் போது கார்களில் பயணம் செய்தவர்களிடம், ‘தங்கள் வாகனம் முழுமையாக பரிசோதனை செய்யப்பட உள்ளது. இந்த பரிசோதனை முழுவதும் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட உள்ளது. ஒத்துழைப்பு கொடுங்கள்’ என்று கலெக்டர் தெரிவித்தார். இதையெடுத்து கார்களின் பயணம் செய்தவர்களும் வாகன தணிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர்.
Related Tags :
Next Story