தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 28 புகார்கள் வந்துள்ளன சுவர் விளம்பரம்-கொடிக்கம்பங்களை அகற்ற நடவடிக்கை


தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 28 புகார்கள் வந்துள்ளன சுவர் விளம்பரம்-கொடிக்கம்பங்களை அகற்ற நடவடிக்கை
x
தினத்தந்தி 16 March 2019 4:15 AM IST (Updated: 15 March 2019 11:00 PM IST)
t-max-icont-min-icon

குமரி தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 28 புகார்கள் வந்துள்ளன. அவற்றில் சுவர் விளம்பரங்கள் மற்றும் கொடிக்கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கடந்த 11-ந் தேதி முதல் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. நாஞ்சில் கூட்ட அரங்கின் அருகில் உள்ள ஒரு அறையில் செயல்பட்டு வந்த கட்டுப்பாட்டு அறை நேற்று முதல் நாஞ்சில் கூட்ட அரங்கில் செயல்பட்டு வருகிறது.

இந்த கட்டுப்பாட்டு அறையை 18005998010, 04652 -225564 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் எனவும், மேலும் தேர்தல் தகவல் தொடர்பு மைய தொலைபேசி எண் 1950-ஐ தொடர்பு கொண்டு, தேர்தல் தொடர்பான தகவல் மற்றும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் அறிவித்துள்னர்.

இருப்பினும் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு 13-ந் தேதியில் இருந்து புகார்கள் வரத்தொடங்கின. நேற்று முன்தினம் வரை 2 நாட்களில் 27 புகார்கள் வந்துள்ளன. அதில் அதிகபட்சமாக பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் இருந்து 20 புகார்கள் மற்றும் கன்னியாகுமரி தொகுதியில் இருந்து 3 புகார்களும், விளவங்கோடு தொகுதியில் இருந்து 4 புகார்களும் வந்துள்ளன. நேற்று காலை கன்னியாகுமரி தொகுதியில் இருந்து ஒரு புகார் வந்தது. அதன்படி மொத்தம் 28 புகார்கள் வந்துள்ளன.

இவற்றில் பெரும்பாலான புகார்கள் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும், சுவர் விளம்பரங்களை அழிக்க வேண்டும் என்பதாக இருந்தன. இந்த புகார்களை கட்டுப்பாட்டு அறை பணியாளர்கள், சம்பந்தப்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகள் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கொடிக்கம்பங்கள் மற்றும் சுவர் விளம்பரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.

கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை நேற்று மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி ஆய்வு செய்தார்.

மேலும் தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் அரசியல் விளம்பரங்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஆய்வு செய்வதற்காக ஏற்பாடுகள் நடந்தன.

Next Story