தேர்தல் பறக்கும் படையினர் சோதனை, ரூ.12 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் பறிமுதல்
தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வானூர்,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு மதுபானம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கவும், பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கவும் பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் வானூர் தேர்தல் பிரிவு சிறப்பு பறக்கும் படை அதிகாரி இளவரசன் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள், ஆரோவில் போலீசார் ஆகியோர் கொண்ட பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு மொரட்டாண்டி சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 18 அட்டை பெட்டிகளில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காரில் வந்த 2 பேரிடம், பறக்கும்படையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், பெங்களூருவை சேர்ந்த மகாவீர் மகன் ராகுல் (வயது 23), சென்னையைச் சேர்ந்த முகமது இத்தியாஸ் (25) ஆகியோர் என்பதும், சென்னையில் வெள்ளி நகைக்கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. நேற்று முன்தினம் இவர்கள் வெள்ளி கொலுசுகள் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி பொருட்களை புதுச்சேரியில் உள்ள நகைக்கடைகளில் கொடுத்துவிட்டு மீதமுள்ள வெள்ளிப்பொருட்களுடன் சென்னைக்கு புறப்பட்டதும் தெரியவந்தது. ஆனால் அவர்களிடம் வெள்ளிப்பொருட்களை கொண்டு செல்வதற்கும், காருக்கும் உரிய ஆவணங்கள் இல்லை.
அதைத் தொடர்ந்து வெள்ளிப்பொருட்கள் மற்றும் காரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை வானூர் தாசில்தார் பரமேஸ்வரியிடம் ஒப்படைத்தனர். தாசில்தார் உத்தரவின்பேரில் அந்த வெள்ளி பொருட்கள் வானூர் சார்நிலை கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
Related Tags :
Next Story