தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு - அதிகாரிகளுடன் ஆலோசனை
தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தில் திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார் ஆய்வு செய்தார்.
தேனி,
தேனி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் 18-ந்தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொடுவிலார்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்படும். அங்கு துணை ராணுவ பாதுகாப்பில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும்.
இந்த வாக்கு எண்ணும் மையம் தயார் நிலையில் உள்ளதா? என்பது குறித்து திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறைகள், இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் அறைகள், வாக்கு எண்ணிக்கை நடக்கும் அறைகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள், ஏற்கனவே பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள், புதிதாக கேமராக்கள் பொருத்தப்பட வேண்டிய இடங்கள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். ஆய்வைத் தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்களுக்கு தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் டி.ஐ.ஜி. ஜோஷிநிர்மல்குமார் கலந்துகொண்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் தற்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள், வேட்பு மனு தாக்கல், மனுக்கள் பரிசீலனையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பிரசாரத்தின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். மேலும் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் செலுத்த வேண்டிய கவனம், ரவுடி பட்டியலில் உள்ளவர்களை கண்காணிப்பது தொடர்பாகவும் அறிவுரைகள் வழங்கினார். இதில் மாவட்டத்தில் பணியாற்றும் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அதேபோல், வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, பெரியகுளம், தென்கரை, தேவதானப்பட்டி, ஜெயமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையங்களையும் டி.ஐ.ஜி. ஆய்வு செய்தார். வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா? எந்த வகையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது? என்பதை ஆய்வு செய்து, அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுவது குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
Related Tags :
Next Story