நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக ஒத்திகை நடத்த வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவு
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக ஒத்திகை நடத்த வேண்டும் என வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு கலெக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவிட்டார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று மாலையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத்சிங் கலோன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி கூறியதாவது;-
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவிற்கு முன்தினமே வாக்குச்சாவடியில் போதுமான இடவசதி, வாக்காளர்கள் உள்ளே நுழையவும், வெளியே வரவும் தனித்தனி வழிகள், ஒரு நுழைவாயில் மட்டும் இருந்தால் நடுவில் ஒரு கயிற்றை கட்டி தனித்தனி வழிகள் ஏற்படுத்திகொள்ள வேண்டும். வாக்குச்சாவடிக்குள் எந்த ஒரு அரசியல் தலைவரின் படம் இருந்தாலும் அதனை அப்புறப்படுத்த வேண்டும். வாக்குப்பதிவு எந்திரத்தை தரையில் வைக்க கூடாது. வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிக்கு வெளியே வாக்குச்சாவடியில் அடங்கும் பகுதிகள் மற்றும் அங்கு வாக்களிக்கும் வாக்காளரின் விவரம் அடங்கிய அறிவிப்பை ஒட்ட வேண்டும். வாக்குச்சாவடியின் 100 மீட்டர் சுற்றளவுக்குள் எந்தவிதமான அரசியல் விளம்பரங்களோ, 200 மீட்டர் சுற்றளவுக்குள் சாமியானா உள்ளிட்ட எவ்வித பந்தல்களோ அமைக்க கூடாது.
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக ஒத்திகை வாக்குப்பதிவு நடத்த வேண்டும். குறித்த நேரத்தில் வாக்குப்பதிவு ஆரம்பிக்க வேண்டும். வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்கள் நுழைவதை காவலரின் உதவியுடன் முறைப்படுத்த வேண்டும். புகைப்படம்-வீடியோ எடுக்க தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றவர்களை தவிர வேறு யாரும் புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதிக்க கூடாது. 17-ஏ பதிவேட்டில் வாக்காளரின் பாகம் எண், வரிசை எண், அடையாள அட்டை எண் போன்ற விவரங்களை எழுதி அவரது கையொப்பம், இடது கை பெருவிரல் ரேகையை பெற்றுக்கொண்டு துண்டு சீட்டில் வாக்காளரின் விவரத்தை எழுதி அவரிடம் வழங்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து இடைத்தேர்தல் நடைபெறும் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு தலைமை வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் 5 வாக்கு சாவடி அலுவலர்கள் இருப்பார்கள். 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குசாவடிகளுக்கு ஒரு வாக்குச்சாவடி அலுவலர் கூடுதலாக நியமிக்கப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story