பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்


பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 15 March 2019 11:00 PM GMT (Updated: 15 March 2019 7:33 PM GMT)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பர்கூர்,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஆசை வார்த்தைகளை கூறி காதலித்து, ஏமாற்றி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் பலரும் இதில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கிட கோரியும் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தூக்கிலிட வேண்டும். தலைமறைவாக உள்ளவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதற்கிடையே மாணவர்களின் போராட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை கல்லூரிக்குள் செல்ல அனுமதி மறுத்த நிர்வாகம், நுழைவு வாயிலை பூட்டி வைத்தனர். மேலும் பத்திரிகையாளர்கள் யாரும் கல்லூரிக்குள் வரக்கூடாது என்று கூறினார்கள். இதனால் பத்திரிகையாளர்கள் கல்லூரிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

Next Story