கம்பைநல்லூர், தளி அருகே வாகன சோதனையில் ரூ1.82 லட்சம் பறிமுதல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை


கம்பைநல்லூர், தளி அருகே வாகன சோதனையில் ரூ1.82 லட்சம் பறிமுதல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 16 March 2019 4:00 AM IST (Updated: 16 March 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

கம்பைநல்லூர், தளி அருகே பறக்கும் படைஅதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1.82 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மொரப்பூர்,

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சட்டசபை இடைத்தேர்தலையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள இருமத்தூர் பகுதியில் பறக்கும் படையை சேர்ந்த நெடுஞ்சாலை துறை அதிகாரி பாஸ்கரன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். இதில் ரூ.73,900 கொண்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து வேனில் வந்த சித்தன்கொட்டாயை சேர்ந்த கணேசன் (வயது30) என்பவரிடமிருந்து விசாரணை நடத்தினர். அப்போது பட்டுக்கூடு வியாபாரத்திற்கு பணம் கொண்டு சென்றதாக அவர் தெரிவித்தார். ஆனால் அவர் கொண்டு சென்ற பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் ரூ.73,900-த்தை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பறக்கும் படையினர் அரூர் உதவி கலெக்டர் புண்ணியகோடியிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய உதவி கலெக்டர் புண்ணியகோடி, உரிய ஆவணத்தை காண்பித்து பணத்தை திரும்ப பெற்று செல்லுமாறு கணேசனிடம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உளிவீரனபள்ளியில் கண்காணிப்பு குழு அதிகாரி குமார் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 950 கொண்டு சென்றது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அதனை அதிகாரிகள் கைப்பற்றி, தளி தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், உதவி ஆணையருமான(ஆயம்) முரளியிடம் ஒப்படைத்தனர். அப்போது தேன்கனிக்கோட்டை தாசில்தார் முத்துப்பாண்டி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். கம்பைநல்லூர், தளி அருகே மினிவேன், காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற மொத்தம் ரூ.1.82 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Next Story