தாமோதரன்பட்டினம் கிராமத்தில் இறால் பண்ணைகளை அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம்
தாமோதரன்பட்டினம் கிராமத்தில் உள்ள இறால் பண்ணைகளை உடனடியாக அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொண்டி,
திருவாடானை தாலுகா தாமோதரன்பட்டினம் கடற்கரை கிராமத்தில் செயல்பட்டு வரும் இறால் பண்ணைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி நேற்று தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக கிராம மக்கள் அறிவித்திருந்தனர். இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று இந்த கிராமத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள், பள்ளிக்குழந்தைகள் உள்பட கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் தாலுகா அலுவலகத்தின் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மேலும் தாசில்தாரை சந்தித்து மனு அளிப்பதற்காக அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். அப்போது திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் பொதுமக்களை அலுவலக வாசலில் தடுத்து நிறுத்தியதுடன் தேர்தல் விதிகள் நடைமுறையில் இருப்பதால் கட்சி மற்றும் அமைப்புகளின் கொடிகளை அனுமதியின்றி பிடித்து செல்லக்கூடாது என்று தெரிவித்தனர்.
இதனால் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே நீண்டநேரம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பொதுமக்கள் தாலுகா அலுவலக வாசலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் தாசில்தார் சேகர் பொதுமக்களை நேரில் சந்தித்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடிந்தவுடன் இதுதொடர்பாக அனைத்து துறை அதிகாரிகள் குழுவாக சென்று தாமோதரன்பட்டினம் கிராமத்தில் உள்ள இறால் பண்ணைகள் குறித்து நேரில் ஆய்வு செய்து மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி அவருடைய உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால் பொதுமக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
அதனை தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சேகர், போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் ஆகியோர் முன்னிலையில் போராட்டக்குழு பிரதிநிதிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது கிராமமக்கள் தரப்பில் கூறியதாவது:- தாமோதரன்பட்டினம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாட்டு படகுகளை கரையில் நிறுத்தும் இடங்களில் இறால் பண்ணைகளை அமைத்துள்ளனர். மேலும் இப்பகுதியில் நீர்நிலைகள் அனைத்தும் உப்பு நீராக மாறி கொண்டிருக்கிறது. அரசின் சார்பில் ரூ.9 லட்சம் மதிப்பில் சமீப காலத்தில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய கிணற்றில் நீர் உப்புத்தன்மை கொண்டதாக மாறிவிட்டது. இதனால் தினமும் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த இறால் பண்ணைகளை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில் கிராம மக்கள் ஊரை காலி செய்து விட்டு வேறு எங்காவது தான் செல்லவேண்டும். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இக்கிராமத்தில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கமாட்டோம். இவ்வாறு அவர் கூறினர்.
இதையடுத்து கிராம மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் ஒருவார காலத்திற்குள் அனைத்து துறை அதிகாரிகள் குழு கிராம பிரதிநிதிகளுடன் இறால் பண்ணைகளை நேரில் ஆய்வு செய்து அதனை அறிக்கையாக மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story