நீடாமங்கலம் அருகே, மின்சாரம் தாக்கி பெண் பலி - ஆந்திராவை சேர்ந்தவர்
நீடாமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி ஆந்திராவை சேர்ந்த பெண் பலியானார்.
கொரடாச்சேரி,
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், காவாளி தாலுகா கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோட்டையன். இவருடைய மனைவி திருப்பத்தம்மாள் (வயது 40). இவர் ஆந்திராவில் இருந்து வந்து திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே தேவங்குடி போலீஸ் சரகத்தில் கட்டையடி என்ற கிராமத்தில் வாத்து மேய்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கட்டையடியில் தங்கியிருந்த இடத்திற்கு திருப்பத்தம்மாள் வரவில்லை. இதனால் இவருடன் வாத்து மேய்க்க வந்திருந்த உறவினர்கள் பல இடங்களில் தேடிபார்த்துள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை கட்டையடியில் ஒருவரது வயலில் திருப்பத்தம்மாள் இறந்து கிடந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர்
திருப்பத்தம்மாளின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேவங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திருப்பத்தம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் வயலில் உள்ள எலிகளை பிடிக்க மின்கம்பி வைத்து மின் இணைப்பு கொடுத்திருக்கலாம். இது தெரியாமல் திருப்பத்தம்மாள் மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக புகாரின்பேரில் போலீசார் வயல் உரிமையாளரை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story