காரைக்குடி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய லாரி டிரைவர் கைது


காரைக்குடி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 16 March 2019 3:15 AM IST (Updated: 16 March 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு ஒரு நபர் தலைமறைவானாராம். இதையடுத்து அந்த சிறுமிக்கு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

ஆனால் சிறுமியிடம் கர்ப்பமாக்கிய நபர் குறித்து கேட்ட போது, அவள் எந்த தகவலையும் சொல்லவில்லை. மேலும் கர்ப்பமாக்கிய நபர் பற்றி தவறான தகவல்களை தான் சிறுமி கூறி வந்தாள். இதனால் போலீசார் நடவடிக்கை எடுப்பதில் தாமதமானது. இந்தநிலையில் மகளிர் போலீசார் சிறுமியிடம் சாமர்த்தியமாக பேசி உண்மையை வரவழைத்தனர்.

அதில் சிறுமி, தன்னை கர்ப்பமாக்கியவர் நல்லவர் என்றும், அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார், உண்மையை சொன்னால் அவரை நீங்கள் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவீர்கள் என்பதால், நான் உண்மையை கூறவில்லை என்றும் போலீசாரிடம் புலம்பினாள்.

அதைத்தொடர்ந்து சிறுமியிடம் ஆதரவாக பேசிய போலீசார் அனைத்து உண்மைகளையும் வரவழைத்தனர். அப்போது நங்கபட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் பழனியப்பன் (வயது 23) சிறுமியை கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பழனியப்பனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story