பஸ்-மொபட் மோதிய விபத்தில் தொழிலாளி பலி: காயம் அடைந்த மனைவியும் சாவு


பஸ்-மொபட் மோதிய விபத்தில் தொழிலாளி பலி: காயம் அடைந்த மனைவியும் சாவு
x
தினத்தந்தி 16 March 2019 3:45 AM IST (Updated: 16 March 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே பஸ்-மொபட் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். விபத்தில் காயம் அடைந்த அவருடைய மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சாத்தான்குளம்,

நெல்லை மாவட்டம் இட்டமொழி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 52). சலவை தொழிலாளி. இவருடைய மனைவி ஜக்கம்மாள் (47). இவர்களுக்கு 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் மாலையில் தங்கராஜ் தன்னுடைய மனைவியுடன், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடந்த வாரச்சந்தையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக, மொபட்டில் புறப்பட்டு சென்றார்.

சாத்தான்குளம் அருகே புதுக்குளம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் சென்றபோது, வள்ளியூரில் இருந்து சாத்தான்குளத்துக்கு சென்ற தனியார் கல்லூரி பஸ் எதிர்பாராதவிதமாக மொபட்டின் மீது மோதியது. இந்த விபத்தில் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் படுகாயம் அடைந்த ஜக்கம்மாளை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வள்ளியூரைச் சேர்ந்த தனியார் கல்லூரி பஸ் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story