ஊட்டியில் வாகன சோதனை, அ.தி.மு.க. உறுப்பினர் அட்டைகள் பறிமுதல்
ஊட்டியில் நடந்த வாகன சோதனையில் அ.தி.மு.க. உறுப்பினர் அட்டைகள் பறிமுதல் செய்யப் பட்டன.
ஊட்டி,
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து உள்ளன. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து உள்ளது. நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். ஊட்டி-கோத்தகிரி சாலை தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அ.தி.மு.க. பிரமுகரின் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
காரில் வெள்ளை சட்டைகள்- 25, அ.தி.மு.க. கட்சிக்கொடியின் வண்ணங்களில் தயாரிக்கப்பட்ட துண்டுகள்-94, அ.தி.மு.க. உறுப்பினர் அட்டைகள்-765 மற்றும் வேட்டி-சேலைகள், அரசியல் தலைவர்களின் உருவம் அச்சிடப்பட்ட காலண்டர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 3 தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் 3 கண்காணிப்பு குழுக்கள் பயன்படுத்தும் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவிகள் நேற்று பொருத்தப்பட்டன. இதன் மூலம் அந்த வாகனங்கள் எங்கே செல்கிறது என்பதை கண்டறியவும், ஒரே இடத்தில் அதிக நேரம் நிறுத்தப்பட்டு இருந்தால் ஏன் நிறுத்தப்பட்டு உள்ளது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரிக்கவும் முடியும். மேலும் ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சென்னையில் இயங்கும் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்தபடியே வாகனங்கள் செல்லும் இடங்களை பார்க்கலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story