மேற்கு தொடர்ச்சி மலையில் கடும் வறட்சி: மேய்ச்சல் மாடுகள் உயிரிழக்கும் அபாயம்
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் பல இடங்களில் இருந்து மேய்ச்சலுக்கு கொண்டு வரப்பட்டுள்ள மாடுகள் உயிரிழக்கும் நிலை உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பல இடங்களில் மாடு வளர்ப்போர் அவற்றை மேய்ச்சலுக்காக விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்கு கொண்டு வருவது வாடிக்கையாகும். வத்திராயிருப்பு, செண்பகத்தோப்பையொட்டி அவை மேய்ச்சலுக்கு விடப்படும்.
நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளை ஓட்டி வரும் கால்நடை வளர்ப்போர் அவற்றை இரவில் அங்குள்ள விவசாய நிலங்களில் கிடை போடுவார்கள். இரவு முழுக்க அங்கு கிடைபோடுவதால் அவற்றின் சாணம் வயலுக்கு உரமாக அமையும். விவசாயிகள் கிடை போட அனுமதித்து அதற்காக பணமும் கொடுப்பார்கள். இது கால்நடை வளர்ப்போருக்கு வருமானமாகவும் அமையும். தற்போது நெல் அறுவடை முடிந்துள்ள நிலையில் ஏராளமானோர் தங்களது மாடுகளை கொண்டு வந்துள்ளனர்.
ஆனால் இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் அங்கு வசித்த வன விலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன. இந்த நிலையில் கிடை மாடுகளுக்கும் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் மேய்ச்சலுக்கு கொண்டு வரப்பட்டுள்ள மாடுகள் உயிரிழக்கும் பரிதாப நிலை உருவாகி இருக்கிறது.
மேலும் வனப்பகுதியையொட்டி உள்ள இடங்களில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இதனால் கால்நடை வளர்ப்போர் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.
எனவே, வனத்துறை அதிகாரிகள் மாடுகளை மலைப்பகுதிக்குள் சென்று மேய்க்க அனுமதி தர வேண்டும் எனவும் மலைப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிகளில் தண்ணீரை தேக்கி வைத்து வனவிலங்குகளின் தாகத்தை தீர்த்து வைக்க வேண்டும் எனவும், வன உயிரினங்களை காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story