திருப்பூரில் பயங்கரம், கத்தியால் குத்தி தொழிலாளி கொடூரக்கொலை - 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்


திருப்பூரில் பயங்கரம், கத்தியால் குத்தி தொழிலாளி கொடூரக்கொலை - 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 16 March 2019 3:15 AM IST (Updated: 16 March 2019 4:34 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் கத்தியால் குத்தி தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். 5 பேர் கொண்ட கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர்,

திருப்பூர்-பல்லடம் ரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே நேற்று முன்தினம் இரவு சாலையோரத்தில் 55 வயது மதிக்கத்தக்க கூலித்தொழிலாளி ஒருவர் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அவருக்கு அருகே திருப்பூரை சேர்ந்த மணிகண்டன், பாபு, பெரியசாமி ஆகிய 3 பேர் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். இவர்கள் 3 பேரும் சமையல் தொழிலாளர்கள் ஆவார்கள்.

இந்த நிலையில் 5 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்துள்ளது. கும்பலில் உள்ளவர்கள் குடிபோதையில் இருந்துள்ளனர். அந்த கும்பல் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளியை எழுப்பி அவரிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றுள்ளனர். அவர் சத்தம் போடவே கத்தியால் அந்த தொழிலாளியின் நெஞ்சுப்பகுதியில் கொடூரமாக குத்தி விட்டு அவரிடம் இருந்த பணத்தை அந்த கும்பல் பறித்தது.

சத்தம் கேட்டு அருகில் படுத்திருந்த மணிகண்டன், பாபு, பெரியசாமி ஆகியோர் எழுந்து சென்று அந்த கும்பலை தடுக்க முயன்றுள்ளனர். அந்த கும்பல் 3 பேரையும் கற்களால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியது. இதில் 3 பேரும் காயமடைந்தனர். பின்னர் இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையில் காயம்பட்ட கூலித் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

காயமடைந்த மணிகண்டன், பாபு, பெரியசாமி ஆகிய 3 பேரை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். கொலையானவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. காயமடைந்த 3 பேர் தெரிவித்த தகவலின் பேரில் 10 பேரை திருப்பூர் தெற்கு போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருப்பூரில் தொழிலாளி ஒருவர் கத்தியால் குத்தி கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story