சத்தியமங்கலத்தில், கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்


சத்தியமங்கலத்தில், கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 March 2019 4:15 AM IST (Updated: 16 March 2019 4:35 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் அடுத்துள்ள கொமராபாளையத்தில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்துவிட்டு 3 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக நடந்து சென்று, சத்தி-அத்தாணி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்தில் கைது செய்தவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மன்றத்தின் ஈரோடு மாவட்ட செயலாளர் சுரேந்திரன், சத்திய ஒன்றிய பொறுப்பாளர் சீனிவாசன், சந்தோஷ் ஆகியோர் முன்னிலையில் இந்த போராட்டம் நடைபெற்றது. சாலை மறியலில் ஈடுபட்டிருந்த மாணவ-மாணவிகள் கோரிக்கைகள் குறித்து எழுதப்பட்ட பதாகைகளையும் கைகளில் வைத்திருந்தார்கள். இந்த போராட்டம் குறித்த தகவல் கிடைத்ததும், சத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதி அளித்தார்.

அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்கள்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. 

Next Story