திருநங்கைகள், சாதுக்களுக்கு வாக்காளர் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி குறித்த விழிப்புணர்வு கலெக்டர் பங்கேற்பு
திருவண்ணாமலையில் திருநங்கைகள், சாதுக்களுக்கு வாக்காளர் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் கலெக்டர் கந்தசாமி கலந்துகொண்டார்.
திருவண்ணாமலை,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி என 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் 2 ஆயிரத்து 374 வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி பயன்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதியன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 76 திருநங்கை வாக்காளர்களும், 354 சாதுக்கள் வாக்காளர்களும் உள்ளனர்.
மேலும் தற்போது நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் 278 சாதுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று திருநங்கைகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர்கள் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி குறித்த விழிப்புணர்வு முகாம் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் வேங்கிக்காலில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
முகாமில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்துகொண்டு திருநங்கைகளுக்கு விழிப்புணர்வு அளித்து பேசினார். மேலும் வாக்காளர்கள் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். முன்னதாக திருநங்கைகள், கலெக்டருக்கு சால்வை அணிவித்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அதேபோல் கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலை கோவில் அருகில் உள்ள சாதுக்களிடமும் இந்த கருவியின் செயல்பாடு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்தும், 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்தும், வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி கலெக்டர் பேசினார்.
அப்போது திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி, தாசில்தார் மனோகரன், திருவண்ணாமலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ், வேங்கிக்கால் ஊராட்சி செயலாளர் உமாபதி மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story