சாணார்பட்டியில், குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


சாணார்பட்டியில், குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 16 March 2019 4:15 AM IST (Updated: 16 March 2019 4:35 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கேட்டு சாணார்பட்டி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கோபால்பட்டி,

சாணார்பட்டி ஒன்றியம் கூவனூத்து புதூர் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வ ருகின்றனர். இவர்களுக்கு 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த ஆண்டு போதிய அளவு மழை பெய்யாததால் ஆழ்துளை கிணறுகள் தண்ணீரின்றி வறண்டது. இதன்காரணமாக கடந்த 6 மாதங்களாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதன்காரணமாக தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் சாணார்பட்டி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அலுவலகத்தின் முன்பு தர்ணாவிலும் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த 6 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யாததால் தோட்டங்களில் உள்ள கிணறுகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம். ஆனால் வறட்சி காரணமாக அங்கும் தண்ணீர் பிடிக்க தோட்ட உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்தோ அல்லது காவிரி கூட்டுக்குடிநீர் மூலமாகவோ குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்க்காமல் எங்கள் கிராமத்துக்கு யாரும் ஓட்டு கேட்க வரவேண்டாம்’ என்றனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணறுகளை ஆழப்படுத்தி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறினர். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story