பரபரப்பான தேர்தல் பணிகளுக்கு இடையே வெறிச்சோடி கிடக்கும் அ.தி.மு.க. அலுவலகம்
தேர்தல் பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், தேனியில் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெறிச்சோடி கிடக்கிறது.
தேனி,
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகிய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
மாவட்ட அளவிலும், ஒன்றிய, நகர அளவிலும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பல்வேறு கட்ட ஆலோசனை கூட்டங்கள் நடத்தி தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். பரபரப்பான அரசியல் சூழலில் தேனி மாவட்ட அ.தி.மு.க. தலைமை அலுவலகம் எந்த பரபரப்பும் இன்றி வெறிச்சோடியே காணப்படுகிறது. பிரமாண்டமான கட்டிடம் கட்டப்பட்ட போதிலும், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்கள் எதுவும் இங்கு நடத்தவில்லை.
பெரும்பாலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்கள் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் வைத்தே நடந்து வருகிறது. மாவட்ட தலைமை அலுவலகம் கட்டப்பட்ட போது, அ.தி.மு.க.வில் விரிசல் ஏற்படவில்லை. முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியதை தொடர்ந்து அ.தி.மு.க. 2 அணியாக பிரிந்தது. அப்போது கட்சியின் மாவட்ட செயலாளராக தங்கதமிழ்செல்வன் இருந்தார். கட்சி அலுவலகமும் அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் ஒன்றாக இணைந்து அ.தி.மு.க. கட்சியும், இரட்டை இலை சின்னமும் மீட்கப்பட்டது. அதே நேரத்தில் டி.டி.வி.தினகரனை துணை பொதுச்செயலாளராக கொண்டு அ.ம.மு.க. தொடங் கப்பட்டது.
பின்னர் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து தங்கதமிழ்செல்வன் நீக்கப்பட்டார். புதிய மாவட்ட செயலாளராக சையதுகான் நியமிக்கப்பட்டார். இருப்பினும் அ.தி.மு.க. நிர்வாகிகள் இந்த மாவட்ட தலைமை அலுவலகத்தை பயன்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வந்தது.
ஓ.பன்னீர்செல்வமும் தர்மயுத்தம் தொடங்கிய கால கட்டத்துக்கு பின்னர் இதுவரை இந்த அலுவலகத்துக்குள் செல்லவில்லை. இதற்கிடையே இந்த அலுவலகத்தை உரிமம் கொண்டாடுவது தொடர்பாக அ.தி.மு.க., அ.ம.மு.க.வினர் இடையே ஏற்பட்ட பிரச்சினை எதிரொலியாக இருதரப்பினர் மீதும் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த அலுவலகத்தை அ.தி.மு.க. அல்லது அ.ம.மு.க.வினர் யாரேனும் பயன்படுத்துவார்களா? அல்லது காட்சிப் பொருளாகவே இருக்குமா? என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.
இதுகுறித்து அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள் தரப்பில் கேட்டபோது, ‘மாவட்ட தலைமை அலுவலக கட்டிடம் கட்டப்பட்டபோது, அ.தி.மு.க.வில் விரிசல் இல்லை. பின்னர் 2 அணியாக பிரிந்து, மீண்டும் இணைப்பு விழா நடத்திய போதிலும், டி.டி.வி.தினகரனால் அ.ம.மு.க. தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனின் நிர்வாக பொறுப்பில் இருந்து வந்தது. பூங்குன்றன் தற்போது டி.டி.வி.தினகரனுடன் உள்ளார். இதனால், அ.தி.மு.க.வினர் இங்கு செல்வதில் சிக்கல் உள்ளது. அ.தி.மு.க. அலுவலகம் என்று இருப்பதால் அ.ம.மு.க. நிர்வாகிகளும் இங்கு செல்வது இல்லை. கட்டிட பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்ற தகவல்கள் கிடைக்கப்பெற்றன.
Related Tags :
Next Story