நிலையான கண்காணிப்பு குழு-பறக்கும் படையினர் வாகனங்களில் ஜி.பி.ஆர்.எஸ். கருவி


நிலையான கண்காணிப்பு குழு-பறக்கும் படையினர் வாகனங்களில் ஜி.பி.ஆர்.எஸ். கருவி
x
தினத்தந்தி 17 March 2019 3:45 AM IST (Updated: 17 March 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

நிலையான கண் காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படையினர் வாகனங்களில் ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை,

நாடாளுமன்ற பொது தேர்தல் தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான அனைத்து புகார்களை விசாரணை செய்யவும், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் போன்றவற்றை கொடுக்க யாரேனும் முயற்சித்தால் அதனை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காகவும், வாகனங்களில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் மற்றும் பரிசுபொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்காணிக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும், ஒவ்வொரு தொகுதிக்கும் 3 நிலையான கண்காணிப்பு குழுவினர் மற்றும் 3 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இவ்விரு குழுக்களிலும் தலா ஒரு தாசில்தார் நிலையிலான அலுவலர், ஒரு உதவி ஆய்வாளர், இரு காவலர்கள், ஒரு வீடியோ ஒளிப்பதிவாளர் இருப்பர்.

இவர்கள் செய்யும் சோதனைகள் அனைத்தும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும். மேலும் சுழற்சி முறைகளில் பணிபுரிவார்கள். காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரையும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையும் பணியில் ஈடுபடுவார்கள். ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் ரொக்கமாக பணம் எடுத்து சென்றால் அவற்றுக்கான ஆவணங்களை கையோடு எடுத்து செல்ல வேண்டும் எனவும், ரூ.10 ஆயிரம் மதிப்புக்கும் மேல் புதிய பொருட்களை எடுத்து சென்றால், அதுதொடர்பான ஆவணங்களையும் எடுத்து செல்ல வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் முறையாக செயல்படுகிறதா என்று கண்காணிக்க, அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கருவி பொருத்தப்பட்டு உள்ளதால் எந்த நேரத்தில் எந்த இடங்களில் இவர்கள் கண்காணிப்பு பணியில் உள்ளனர் என மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் கண்காணிக்க முடியும். மேலும் கண்காணிப்பு குழுக்களின் செயல்பாடுகளையும், இந்த ஜி.பி.ஆர்.எஸ். கருவி மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story