ஆதிவாசி மக்களின் வாழ்க்கை முறையை அறிய அரசு பள்ளி மாணவ-மாணவிகள் களப்பயணம்


ஆதிவாசி மக்களின் வாழ்க்கை முறையை அறிய அரசு பள்ளி மாணவ-மாணவிகள் களப்பயணம்
x
தினத்தந்தி 17 March 2019 4:00 AM IST (Updated: 17 March 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

ஆதிவாசி மக்களின் வாழ்க்கை முறையை அறிய அரசு பள்ளி மாணவ-மாணவிகள் களப்பயணம் மேற்கொண்டனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே குண்டாடாவில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆதிவாசி மக்களின் வாழ்க்கை முறை மற்றும் இயற்கை சூழலை குண்டாடா அரசு பள்ளி மாணவ-மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் அவர்களை களப்பயணத்துக்கு அழைத்து செல்ல ஆசிரியர்கள் முடிவு செய்தனர். இதற்கு தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன், ஆசிரியை மல்லிகா ஆகியோர் தலைமையில் 30 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து கட்டபெட்டு பகுதியில் இருந்து களப்பயணம் தொடங்கியது. இதனை கோத்தகிரி வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக கடந்த 1941-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ரேலியா அணைக்கு மாணவ-மாணவிகள் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அணையின் பயன்பாடு, சிறப்பு குறித்து அவர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது. பின்னர் அணையை ஒட்டியுள்ள வனப்பகுதிக்கு மாணவ-மாணவிகள் நடந்து சென்றனர். அங்கு அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் மற்றும் பல்லுயிர் சூழலை கண்டு ரசித்தனர்.

இதையடுத்து பெட்டுமந்து ஆதிவாசி கிராமத்துக்கு சென்று, அங்கு தோடர் இன மக்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்கள், மொழி உள்ளிட்டவைகளை மாணவ- மாணவிகள் அறிந்து கொண்டனர். மேலும் வனப்பகுதியில் காட்டெருமை, கருங்குரங்கு, அணில் உள்ளிட்டவற்றையும் கண்டு ரசித்தனர். இந்த களப்பயணம் குறித்து மாணவ-மாணவிகள் கூறியதாவது:-

இதுபோன்ற ஒரு வாய்ப்பை கொடுத்த ஆசிரியர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். ரேலியா அணை பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் புதுவித சூழலை உணர்ந்தோம். பல்வேறு வகை தாவரங்கள், மரங்கள், சிறு வன உயிரினங்கள் போன்றவற்றை பார்த்தோம். இவையெல்லாம் பிரமிப்பாக இருந்தது.

மேலும் ஆதிவாசி கிராமத்துக்கு சென்றபோது, அங்குள்ள மக்களிடம் நன்றாக பழகினோம். அவர்களும் எங்களை தங்கள் பிள்ளைகள் போல நடத்தினார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்த களப்பயணத்தின்போது வனத்துறையினரால் மாணவ-மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

Next Story