அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் 4 நாட்களாக கேட்பாரின்றி நின்ற மோட்டார்சைக்கிள்


அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் 4 நாட்களாக கேட்பாரின்றி நின்ற மோட்டார்சைக்கிள்
x
தினத்தந்தி 17 March 2019 3:45 AM IST (Updated: 17 March 2019 1:21 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் 4 நாட்களாக கேட்பாரின்றி மோட்டார்சைக்கிள் நின்றது.

அந்தியூர்,

அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் வாய்க்கால் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகே சோளக்கதிர், பழம் வைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த பாலத்தின் அருகே கடந்த 4 நாட்களாக ஒரு மோட்டார்சைக்கிள் கேட்பாரின்றி நின்று கொண்டிருந்தது. யாரும் அந்த மோட்டார்சைக்கிளை எடுக்க வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த வியாபாரிகள் இதுகுறித்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று மோட்டார்சைக்கிளில் வெடிகுண்டுகள் எதுவும் இருக்கிறதா? என்று போலீசார் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை.

அந்த மோட்டார்சைக்கிளில் உள்ள பதிவு எண்ணை வைத்து பார்த்தபோது அது திருப்பூர் மாவட்ட ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது என்று கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ. அலுவலகத்தை தொடர்பு கொண்டு அந்த மோட்டார்சைக்கிளின் உரிமையாளரின் முகவரி, செல்போன் எண்ணை வாங்கினார்கள்.

அதன்பின்னர் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது அதில் பேசியவர், தனக்கும் அந்த மோட்டார்சைக்கிளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது யாருடையது என்று எனக்கு தெரியாது என பதில் அளித்தார்.

இதையடுத்து போலீசார் அந்த மோட்டார்சைக்கிளை கைப்பற்றி அந்தியூர் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அந்த மோட்டார்சைக்கிளை யாரேனும் மர்மநபர்கள் திருடிவிட்டு போலீசாருக்கு பயந்து இங்கு விட்டு சென்றனரா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story