நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் கலெக்டர் ஆய்வு


நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 16 March 2019 11:00 PM GMT (Updated: 16 March 2019 8:31 PM GMT)

கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி,

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிகளுக்கான 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் அறைகளையும், வாக்கு எண்ணும் மையத்தையும், ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைதேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தையும் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான டாக்டர் எஸ்.பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிகளுக்கான 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் அறைகளையும், வாக்கு எண்ணும் மையத்தையும், ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைதேர்தலுக்கான வாக்கு எண்ணும் அரசு தொழிற் நுட்ப கல்லூரியில் இடம் பார்க்கப்பட்டுள்ளது.

தற்சமயம் பாதுகாப்பு பெட்டக அறையில் கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட், மேலும் வி.வி. பேட் எந்திரங்கள் வைக்கவும் இடம் தேவைப்படுகிறது. அதேபோல ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையம் அதற்கும் இடம் தேவைப்படுவதால் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். அதேபோல வாகனங்கள் நிறுத்துவதற்கும், பாதுகாப்பு தடுப்பு அரண்கள் செய்வதற்காகவும், இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. வாக்குகள் எண்ணப்படும் அறைகளுக்கு அலுவலர்கள் வருவதற்கான வசதியும், வேட்பாளர்கள் சார்பாக வரக்கூடிய நபர்களுக்கும் இட வசதியும், இருப்புஅறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு வருவதற்கு தனி வழியும், பொதுப்பணித்துறை சார்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, உதவி கலெக்டர்கள் சரவணன், விமல்ராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், தாசில்தார் மிருணாளினி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வெங்கடேசன், தேர்தல் பிரிவு தாசில்தார் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் உடனிருந்தனர். 

Next Story