சாராய பாக்கெட்டுகளை சாலையில் போட்டு உடைத்து பொதுமக்கள் போராட்டம் 3 பேர் கைது


சாராய பாக்கெட்டுகளை சாலையில் போட்டு உடைத்து பொதுமக்கள் போராட்டம் 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 March 2019 4:30 AM IST (Updated: 17 March 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

செம்பனார்கோவில் அருகே சாராய பாக்கெட்டுகளை சாலையில் போட்டு உடைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொறையாறு,

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே மடப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட சிதம்பரம் கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் தூண்டி என்கிற பாலகிருஷ்ணன்(வயது 50). இவர், பல ஆண்டுகளாக தனது வீட்டில் வைத்து சாராயம் விற்று வந்ததாக தெரிகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார், பாலகிருஷ்ணனை ஏற்கனவே பலமுறை கைது செய்துள்ளனர்.

குண்டர் சட்டத்திலும் பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் அவர், சாராயம் மற்றும் மதுபாட்டில்களை தொடர்ந்து விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் நேற்று பாலகிருஷ்ணன் விற்பனைக்காக வைத்திருந்த 100-க்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் அந்த சாராய பாக்கெட்டுகளை ஆக்கூர்- மடப்புரம் சாலையில் போட்டு உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், சாராயம் விற்ற பாலகிருஷ்ணனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போலீசார், சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த பாலகிருஷ்ணன், அவருடைய உறவினர்கள் ஆக்கூர் உடையவர் கோவில்பத்து கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து(37), அலெக்சாண்டர்(28) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Next Story