தீயணைப்பு சிலிண்டர் தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து கீழ்ப்பாக்கத்தில் பரபரப்பு


தீயணைப்பு சிலிண்டர் தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து கீழ்ப்பாக்கத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 16 March 2019 9:56 PM GMT (Updated: 16 March 2019 9:56 PM GMT)

சென்னை கீழ்ப்பாக்கத்தில் இயங்கி வரும் தீயணைப்பு சிலிண்டர் தயாரிக்கும் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் சாலையில் தீயணைப்பு சிலிண்டர் தயாரிக்கும் கம்பெனி இயங்கி வருகிறது. நேற்று மாலை வேலை முடிந்து ஊழியர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர்.

இந்நிலையில், நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென அந்த கம்பெனிக்குள் இருந்து பயங்கர வெடிச்சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கம்பெனிக்குள் இருந்த தீயணைப்பு சிலிண்டர்கள் வெடித்து வெளியில் வந்து விழுந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கீழ்ப்பாக்கம், எழும்பூர், வேப்பேரி, திருவல்லிக்கேணியில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தன. ரசாயனம் கலந்த பொருட்கள் என்பதால் தீயை எளிதாக கட்டுப்படுத்த முடியவில்லை.

2 மணி நேர போராட்டம்

சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்து லாரிகளிலும் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடினர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர், இரவு 10 மணி அளவில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்துக்கு காரணம் மின்கசிவு என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்தின் போது ஊழியர்கள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. அந்த கம்பெனிக்கு எதிரே பள்ளிக்கூடம் மற்றும் கோவில் உள்ளது. தீ விபத்து பகலில் ஏற்பட்டு இருந்தால் பெருமளவில் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும்.

மூட நடவடிக்கை

தீ விபத்து குறித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் கூறும்போது, “மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் இது போன்ற தீவிபத்து ஏற்பட்டு இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கம்பெனியின் கட்டிடம் தீ விபத்தில் எரிந்து முற்றிலும் நாசம் ஆகி உள்ளது. எனவே மேற்கொண்டு இந்த கட்டிடத்தில் அந்த கம்பெனி இயங்காத வகையில் அதிகாரிகள் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Next Story