பங்குனி பெருவிழாவையொட்டி மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் இன்று தேரோட்டம் அறுபத்து மூவர் திருவிழா நாளை நடக்கிறது


பங்குனி பெருவிழாவையொட்டி மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் இன்று தேரோட்டம் அறுபத்து மூவர் திருவிழா நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 16 March 2019 9:58 PM GMT (Updated: 16 March 2019 9:58 PM GMT)

பங்குனி பெருவிழாவையொட்டி மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) அறுபத்துமூவர் திருவிழா நடக்கிறது.

சென்னை, 

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி பெருவிழா மற்றும் விடையாற்றி கலை விழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் பகல், இரவு நேரங்களில் வீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தன.

முக்கிய திருவிழாவான தேர்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. காலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள் திருத்தேரில் எழுந்தருள்கின்றனர். தொடர்ந்து காலை 7 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்படுகிறது.

அறுபத்துமூவர் திருவிழா

தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு அறுபத்துமூவர் திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி காலை திருஞானசம்பந்தர் எழுந்தருள, பூம்பாவை உயிர் பெற்று எழுகின்ற நிகழ்ச்சி நடக்கிறது. மாலையில் அறுபத்துமூவர் விழாவையொட்டி விநாயகர் முன்செல்ல, தொடர்ந்து பவளக்கால் சப்பரத்தில் நாயன்மார்களுடன் கபாலீசுவரர்- கற்பகாம்பாள், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமானும், சண்டிகேசருடன் மாட வீதிகளில் வலம் வருகின்றனர்.

அவர்களுடன் திருவள்ளுவர், வாசுகி, முண்டககண்ணி அம்மன், அங்காள பரமேஸ்வரி, திரவுபதி அம்மன், சிந்தாதிரிப்பேட்டை முத்துக்குமரன், கோலவிழி அம்மன் என பலரும் சேர்ந்து கொண்டு வீதி உலா வருகின்றனர். திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

திருக்கல்யாணம்

விழாவையொட்டி பக்தர்களுக்கு நீர் மோர், குளிர்பானங்கள், மதிய உணவு, இனிப்புகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. தொடர்ந்து வருகிற 20-ந்தேதி இரவு 8 மணிக்கு திருக்கல்யாணத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா நாட்களில் நாதஸ்வர நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகளும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை தக்கார் பி.விஜயகுமார் ரெட்டி, இணை-ஆணையர் த.காவேரி உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.

Next Story