மாவட்ட செய்திகள்

மெட்ரோ ரெயிலில் ரூ.2,500-க்கான மாதாந்திர பாஸ் அறிமுகம் + "||" + monthly pass for Rs.2,500 in metro rail

மெட்ரோ ரெயிலில் ரூ.2,500-க்கான மாதாந்திர பாஸ் அறிமுகம்

மெட்ரோ ரெயிலில் ரூ.2,500-க்கான மாதாந்திர பாஸ் அறிமுகம்
சென்னை மெட்ரோ ரெயிலில் ரூ.2,500 கட்டணத்தில் மாதாந்திர பாஸ் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் அலுவலக பணிக்கு செல்வோர் பயன்பெறுவர்.
சென்னை, 

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.1 கி.மீ. தூரத்திற்கு முதல் வழித்தடத்திலும், சென்டிரல் முதல் பரங்கிமலை இடையே 22 கி.மீ. தொலைவிற்கு 2-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நிறைவடைந்து மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் அடுத்த விம்கோ நகர் வரை விரிவாக்கப்பணிகளும் நடந்து வருகிறது.

பயணிகள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மெட்ரோ ரெயில் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஒருநாள் பாஸ்

சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய, தற்போது டோக்கன், டிராவல் கார்டு, டிரிப் கார்டு, சுற்றுலா கார்டு வசதிகள் உள்ளன. இதில், டிராவல் கார்டுக்கு கட்டண தொகையில் 10 சதவீதமும், டிரிப் கார்டுக்கு 20 சதவீதமும் கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.

மேலும் ஒரு நாள் பயண அட்டையையும் அறிவித்தது. இதில் பயணத்துக்கு ரூ.100, முன்பணமாக ரூ.50 என ரூ.150 கொடுத்து அட்டை பெற்று ஒரு நாளில் எத்தனை முறையும் பயணம் செய்யலாம். அட்டையை ஒப்படைக்கும்போது முன்பணம் ரூ.50 திருப்பி கொடுக்கப்படும்.

மாதாந்திர பாஸ்

இந்த நிலையில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் மாதாந்திர பாஸ் அட்டையை (சுற்றுலா கார்டு) அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ரூ.2,500 கொடுத்து இந்த அட்டையை பெற்றுக்கொள்ளலாம். மேலும் முன்பணமாக ரூ.50 செலுத்த வேண்டும். இதன்மூலம் ஒரு மாதம் முழுவதும் எந்த நேரத்திலும் எந்த ரெயில் நிலையத்தில் இருந்தும் பயணம் செய்யலாம். இந்த அட்டை அலுவலக வேலைக்கு செல்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அட்டையை திருப்பிக்கொடுத்தால் முன்பணம் ரூ.50 திருப்பி கொடுக்கப்படும்.

மாதாந்திர அட்டையை எக்காரணம் கொண்டும் ரத்து செய்ய முடியாது. ரத்து செய்ய விரும்பினால், முன்பணம் ரூ.50 மட்டுமே திரும்ப கிடைக்கும்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

நேரம் மிச்சம்

பயணிகளில் 30 சதவீதம் பேர் சுற்றுலா கார்டுகளையும், 30 சதவீதத்தினர் டிரிப் கார்டுகளையும் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலானவர்கள் டோக்கன்களையும் பெற்று பயணம் செய்கின்றனர். தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாதாந்திர அட்டையை பயன்படுத்தி மாதம் முழுவதும் பயணம் செய்யலாம்.

தேவைப்படுபவர்கள் தொடர்ந்து ரீசார்ஜ் செய்தும் பயன்படுத்தலாம். இதனால் பயணிகளின் நேரமும், பணமும் மிச்சமாகும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.