ஏ.டி.எம். பணம் 10 லட்சம் கொள்ளை வழக்கில் நைஜீரிய வாலிபர்கள் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்


ஏ.டி.எம். பணம் 10 லட்சம் கொள்ளை வழக்கில் நைஜீரிய வாலிபர்கள் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 16 March 2019 10:21 PM GMT (Updated: 16 March 2019 10:21 PM GMT)

போரூர் அருகே ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்ப வந்த ஊழியரை வெட்டி ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் நைஜீரிய வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பூந்தமல்லி, 


சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல் அருகே நூம்பல் மூவேந்தர் நகரில் பிப்ரவரி மாதம் 7-ந்தேதி ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்ப வந்த தனியார் நிறுவன ஊழியர் தேவராஜ் (வயது 38) என்பவரை கோடாரியால் வெட்டிவிட்டு ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக நைஜீரியாவை சேர்ந்த அக்யோமாயே(27), பெரல்(26) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் போலீசாரிடம் சிக்கியது எப்படி? என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-

நைஜீரியாவை சேர்ந்தவர்கள்

ஏ.டி.எம். மையத்தில் பணத்தை கொள்ளையடித்தவர்கள் எப்படி இருந்தார்கள்?, எந்த மொழியில் பேசினார்கள்? என தனியார் நிறுவன ஊழியர்களிடம் விசாரித்தபோது, கொள்ளையன், தமிழில் பேசவில்லை. பணத்தை கொடுக்கும்படி ‘கேஷ்’ ‘கேஷ்’ என ஆங்கிலத்தில் மட்டும் பேசியதாக தெரிவித்தனர்.

மேலும் ஏ.டி.எம். மையம் அருகில் உள்ள கடைகளில் விசாரித்தபோது, கொள்ளை சம்பவத்துக்கு முன்னதாக கொள்ளையர்கள் அங்குள்ள ஒரு கடைக்கு சென்று ‘மில்க் சேக்’ வாங்கி குடித்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஹெல்மெட் அணிந்தும், முகத்தில் துணி கட்டி இருந்ததாகவும், மிகவும் கருப்பு நிறத்தில் இருந்ததாகவும் கடைக்கார பெண் தெரிவித்தார். இதை வைத்து கொள்ளையில் ஈடுபட்டது தமிழகத்தை சேர்ந்தவர்கள் இல்லை. நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்கள் என்பது உறுதியானது.

செல்போன் எண்கள்

ஏ.டி.எம். மையத்தில் பணத்தை கொள்ளையடித்து விட்டு சுமார் 11 கி.மீ. தூரம் அவர்கள் பயணம் செய்துள்ளனர். சம்பவம் நடந்த இடம் முதல் அவர்கள் பயணம் செய்த தூரத்துக்கு இடையே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் அந்த பகுதியில் உள்ள செல்போன் கோபுரங்களில் பதிவான சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் செல்போன் எண்களை சேகரித்தோம்.

பின்னர் சென்னையில் தங்கி படித்த மற்றும் படிப்பை முடித்த நைஜீரிய வாலிபர்களின் செல்போன் எண்களை வாங்கி சோதனை செய்தோம். அதில் ஒரு செல்போன் எண் மட்டும் கொள்ளை நடந்த இடத்தில் உள்ள செல்போன் கோபுரத்தில் பதிவாகி இருந்தது.

விசா முடிந்தது

அதை வைத்து தாம்பரத்தில் இருந்த அக்யோமாயேவை முதலில் கைது செய்தோம். பின்னர் மைசூருவில் தங்கி இருந்த பெரல் என்பவரையும் கைது செய்தோம்.

இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள கப்பல் படிப்பு சம்பந்தமான கல்லூரியில் மெக்கானிக் படிப்பை முடித்துவிட்டு உரிய வேலை இல்லாமலும், விசா முடிந்தும் சென்னையில் தங்கி இருந்தனர்.

விசா முடிந்து தமிழகத்தில் தங்கி இருந்தால் மாதம் ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும். ஆனால் சுமார் 2 ஆண்டுகள் பணம் செலுத்தாமல் இருந்துள்ளனர். விசா எடுத்து சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்லவும் பணம் இல்லை. எனவே கொள்ளையடித்து உள்ளனர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

பறிமுதல்

கைதான இருவரிடம் இருந்தும் செல்போன், மோட்டார்சைக்கிள், ரூ.10 லட்சம் இருந்த பணப்பெட்டி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பணப்பெட்டியில் பணம் இல்லை. ரூ.10 லட்சத்தையும் செலவு செய்து விட்டதாக கைதான இருவரும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் அமு என்ற வாலிபர் மற்றும் கல்லூரி மாணவி ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வந்தனர். ஆனால் இந்த கொள்ளைக்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை என தெரிந்ததால் இருவரும் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story